ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்து இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADMK BJP: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க, பாஜக பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு:
முந்தைய 2016-21 அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியை சுத்து போடும் பாஜக:
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கு, அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே கட்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேநேரம், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜகவின் தேசிய தலைமை விரும்புகிறது. அதற்காகவே தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி தருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியில் சிக்கும் அதிமுக?
பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக தலைமை அறிவித்து இருந்தது. அதேநேரம், அண்ணாமலையை மாநில தலைமை பதவியில் இருந்து நீக்கினால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக தயார் நிலையில் இருப்பதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், பாஜக டெல்லி தலைமையோ, அதிமுக கூட்டணியும் வேண்டும், அண்ணாமலையும் வேண்டும் என விரும்புகிறதாம். இதன் காரணமாக தான், எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் அஸ்திரங்கள்:
- அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கட்சியின் சின்னமான இரட்டை இலை முடங்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
- எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மாத தொடக்கத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் பல ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
- இந்நிலையில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
மேகுறிப்பிடப்பட்ட தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் தற்சார்பாக இயங்குபவையே. ஆனால், இந்த அமைப்புகளை தங்கள் சுயலாபத்திற்காக, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பயன்படுத்திக்கொள்வதாக நெடுங்காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. அத்தகைய சூழலில் தான், அதிமுக கட்சி விவகாரம், முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு, எடப்பாடிக்கு நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் சோதனை ஆகியவை அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. இதனால், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க, தேவையான பணிகளை பாஜக தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

