திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளர் மனு
திருச்சுழி சட்டசபை தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திருப்பதி என்ற சுயேட்சை வேட்பாளர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், திருச்சுழி தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு இலவசமாக பணமும், பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருவதால் திருச்சுழி தொகுதியில் சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உள்ளது. திருச்சுழி தொகுதியில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.