அவரது இசையே அருமருந்து.. இசைஞானியை சந்தித்தது வாழ்நாள் பாக்கியம்.. அண்ணாமலை நெகிழ்ச்சி
கோவை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜாவை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் அண்ணாமலை கோவையில் தேர்தல் பணிக்காக முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷா மதுரை வரும் சூழலில் அண்ணாமலை கோவையில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலடி படாத இடம் இல்லை
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இன்று இளையராஜா கோவை வந்துள்ளார். பின்னர், தனியார் ஹோட்டலில் விளம்பரதாரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் விருது அளிக்கப்பட்டது. பிறகு பேசிய இளையராஜா, கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு ஆர்மோனியம் வாசிக்காத இடங்கள் இல்லை. நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கூட கோவையில் செய்யப்பட்டது தான். எனது அண்ணன் கோவையில் தான் ஆர்மோனியம் வாங்குவார். அப்போதில் இருந்தே கோவைக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. பிரிக்கவே முடியாது என தெரிவித்தார்.
அண்ணாமலை சந்திப்பு
இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இசைஞானி இளையராஜாவை சந்தித்து சால்வை அணிவித்தார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில் இளையராஜாவை கண்டதும் அண்ணாமலை நெகிழ்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என பதிவிட்டுள்ளார்.





















