பீகார் தேர்தல் முடிவுகள் 2025 ; ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? செல்வப் பெருந்தகை கேள்வி
தமிழ்நாடு வேறு , பீகார் வேறு என்றும், பாசிசத்தை தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் - செல்வ பெருந்தகை

பீகார் சட்டமன்ற தேர்தல்
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் , ஆளும் கட்சியாக இருந்த என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆர்.ஜே.டி கட்சியின் தேஜஸ்வி யாதவ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பீகாரில் கடந்த நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவானது வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், பெண்கள் இந்த தேர்தலில் அதிகளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தனர். இதனால் ஆண்களின் வாக்குகள் குறைந்தது. இந்த தேர்தலில், என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.க – ஜே.டி.(யூ) லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகள் போட்டியிட்டது.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், 190 -க்கு அதிகமாக இடங்களில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலையில், உள்ளது. இதன் மூலம் பீகாரில் மீண்டும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இப்போதே கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
சென்னை சத்தியமூர்த்திபவனில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தலைவர் நேரு. ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்தவர். இத்தகைய மாபெரும் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி புகழஞ்சலி செலுத்துகிறது.
ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ?
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்திருக்கிறார். பத்தாயிரம் ரூபாய்க்கு வாக்குகளை களவாடி விட்டதாக கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுகளை களவாடி இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு பொருள். ஜனநாயகம் விழுந்து போகிறதா ? ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்ற சவால் காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு வேறு - பீகார் வேறு
தேர்தல் ஆணையம் அனைத்து புகார்களுக்கும் அமைதியாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தேர்தல் முடிவுகளை களவாட போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்கள். தமிழ்நாடு வேறு பீகார் வேறு. பாசிசத்தை தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என இவ்வாறு அவர் பேசினார்.





















