முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை
திருவான்மியூரில் நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக சரியாக காலை 7 மணிக்கு வாக்களித்தார். அவருடன் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் வாக்களித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சரியாக காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் வேளச்சேரி தொகுதி வாக்காளராக உள்ளார்.
இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சரியாக 20 நிமிடங்கள் முன்பாகவே அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர்.
அஜித் வருவதையறிந்த அவரது ரசிகர்கள் வாக்குச்சாவடி மையத்தை சூழ்ந்தனர். அஜித்குமார் வரிசையில் நின்று வாக்களிப்பதாகவே போலீசாரிடம் கூறினார். ஆனால், அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடியதாலும், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததாலும் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அஜித்தையும், அவரது மனைவி ஷாலினியையும் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே கூடிய ரசிகர்களையும் அப்புறப்படுத்தினர்.
பின்னர், அஜித்குமாருக்கும், அவரது மனைவிக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டது, பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் அஜித்குமாருக்கு கையுறை அளித்தனர். அஜித்குமார் மற்றும் ஷாலினி காலையிலே வாக்களித்து சென்று விடலாம் என்பதற்காக, 20 நிமிடங்கள் முன்னதாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்தனர்.
பின்னர், சரியாக காலை 7 மணியளவில் முதல் ஆளாக அஜித்குமார் வாக்களித்தார். பின்னர், அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். வாக்களித்த பிறகு, அஜித் மற்றும் ஷாலினி தங்களது விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்து வாக்களித்துவிட்டோம் என்று காண்பித்தனர். வாக்கப்பதிவு முடிவடைந்த பிறகு அஜித்குமார் மற்றும் ஷாலினி காரில் தங்களது வீட்டிற்கு சென்றனர். அஜித் வாக்களிக்க வந்த காரணத்தால், அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.