OPS vs EPS: இறுதிச் சுற்றில் இபிஎஸ்-ஓபிஎஸ்... கயிறு இழுக்கும் போட்டியில் கரையேறப்போவது யார்?
இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை, என்கிற உணர்வோடு, இருவரில் யார் அதிமுகவை கைப்பற்றப் போகிறார்கள் என்கிற இறுதிச் சுற்று தற்போது தொடங்கியுள்ளது.
‛தாய் வழி வந்த... சொந்தங்கள் எல்லாம்... ஒர் வழி நின்றால்... நாளை நமதே...’ என, எம்.ஜி.ஆர்., என்றோ பாடியது, ஜெயலலிதா காலத்திற்குப் பின், தொண்டர்களின் எண்ணமாக மாறிப்போனது. ஜெ., மரணத்திற்குப்பின் கட்சி இரண்டாகி, இரண்டு பின்னர் ஒன்றாகி, ஒன்றுக்கு தலைமை இரண்டாகி, ஆட்சியும், கட்சியும் இரட்டை குழல் துப்பாக்கியாய், இரட்டை இலையை இணைத்தது.
எம்.ஜி.ஆர்.,க்கு பின், தலைவர் பொறுப்பு யாருக்கும் இல்லை என்று முடிவு செய்து, பொதுச் செயலாளராக ஜெயலலிதா கட்சியை வழிநடத்தினார். ஜெயலலிதாவுக்கு பின் பொதுச் செயலாளர் தேவையில்லை, அந்த பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் என்று முடிவு செய்து, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வழிநடத்தினர். அதே போல, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியை தொடர்ந்தனர்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக எதிர்கட்சி ஆனது. இப்போது, முன்பை விட இன்னும் கூடுதலாக வீரியத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருந்தது. ஆனால், அதிகம் அடக்கி வாசித்தது. அதே நேரத்தில், பாஜக பாய்ந்து கொண்டிருந்தது. பிரதான எதிர்கட்சியாக திமுகவை பாஜக தான் விமர்சிக்கிறது என்கிற பேச்சு பரவலாகவே இருந்தது.
அதிமுகவில் இரட்டை தலைமை காரணமாக, சில முடிவுகள் எடுப்பதில் சிக்கல் இருப்பதால் தான், எதிர்கட்சியாக திமுகவை எதிர்கொள்ள முடியவில்லை என்கிற கருத்தை சமீபத்தில் பரவலாக பேசத்தொடங்கினர், அதிமுக தொண்டர்கள். கட்சி வீரியமாக செயல்பட்டால் தான், தொண்டர்கள் உற்சாகமாக இருப்பார்கள் என்பதை நிர்வாகிகள் பலரும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வெவ்வேறு தருணத்தில் எடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை பிரச்சனையை பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் முன்னெடுத்தனர். இதை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்., சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரேநேரத்தில் எழுந்த இந்த கோரிக்கையின் பின்னணியில் இபிஎஸ்., செயல்பாடு இருப்பதை ஓபிஎஸ்., தாமதமாக புரிந்து கொண்டார்.
இந்நிலையில், இபிஎஸ்., ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்த ஒத்துழைப்பு தருமாறு ஓபிஎஸ்.,யிடம் தூது வரத் தொடங்கினர். அப்போது தான், தனக்கு எதிராக ஒரு ஆதரவு வட்டத்தை இபிஎஸ் கட்டமைத்து விட்டார் என்பதை ஓபிஎஸ் அறிந்தார். இதற்கு முன்பாக இது போன்ற பிரச்சனை வரும் போது, ஒவ்வொரு முறையும் ஓபிஎஸ் இறங்கிச் சென்றிருக்கிறார். இந்த முறை, அப்படி ஒதுங்கினார், அது ஒட்டுமொத்தமாக ஒதுங்கிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து, விழித்துக் கொண்ட ஓபிஎஸ், இம்முறை துணிந்து எதிர்ப்பை தெரிவிக்கத் தொடங்கினார்.
தன்னை அமைப்புச் செயலாளராக மாற்றி, பொதுச்செயலாளராக முடி சூட எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருவதற்கு, தான் எப்போதும் வழிவிடமாட்டேன் என்பதை தூது வந்தவர்களிடம் உறுதியாக தெரிவித்தார் ஓபிஎஸ். போதாக்குறைக்கு, ‛அம்மா இருந்த போது உடன் இருந்தவர்கள், கட்சியிலிருந்து ஒதுங்கி நிற்பவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்றும் பேட்டியளித்தார்.
இதிலிருந்து, எடப்பாடிக்கு எதிராக சசிகலாவை சீனுக்கு கொண்டுவந்து, எடப்பாடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓபிஎஸ்., தயாராகிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ஓபிஎஸ் இந்த அளவிற்கு எதிர் தாக்குதல் நடத்துவார் என்று இபிஎஸ் வட்டாரம் எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுப்பிய மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் விடுதியில் சந்திக்க அழைப்பு விடுத்தார். 75 மாவட்ட செயலாளர்களின், 9 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ்.,யை சந்தித்த நிலையில், அது ஓபிஎஸ்.,க்கு பின்னடைவு என்றாலும், ஒட்டுமொத்த மாவட்ட செயலாளர்களும் தன்வசம் இல்லை என்கிற கவலை இபிஎஸ்.,க்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சசிகலா, டிடிவி என கட்சி பிளவு பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்., பங்குக்கு ஒரு பிரிவினரை பிரித்தால், அது மேலும் கட்சியை பலவீனப்படுத்தும் என்பதால், கட்சிக்கு எந்த பலவீனமும் இல்லாமல், ஒற்றைத் தலைமை பொறுப்பை பெற இபிஎஸ் முனைப்பு காட்டுகிறார். அதற்காக அவரது ஆஸ்தான கொங்கு முன்னாள் மந்திரிகள், ஓபிஎஸ்.,யிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அதில் தோல்வி ஏற்பட்டது. இனி ஓபிஎஸ்.,யிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்பதால், அவருக்கு ஆதரவு தருவோரை தங்கள் வசம் கொண்டு வர இபிஎஸ் தரப்பு கடுமையாக வேலை செய்து வருகிறது.
கடந்த தர்மயுத்தத்தின் போது, ஓபிஎஸ் வசம் நின்று முக்கிய நிர்வாகிகள் பலர், இப்போது இபிஎஸ்., வசம் நிற்கிறார்கள். இது ஓபிஎஸ்.,க்கு பின்னடைவு என்றாலும், ஓபிஎஸ்.,க்கு இன்னும் குறிப்பிட்ட ஆதரவாளர்கள் பலம் உள்ளது. அது கட்டாயம் அதிமுகவுக்கு தேவை. என்பதால், எப்படியாவது ஓபிஎஸ்.,யை சமரசம் செய்ய ஒரு கட்ட முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை, எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ், சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும், தானும் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக நின்று, காய் நகர்த்துகிறார்.
இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை, என்கிற உணர்வோடு, இருவரில் யார் அதிமுகவை கைப்பற்றப் போகிறார்கள் என்கிற இறுதிச் சுற்று தற்போது தொடங்கியுள்ளது. இந்த கயிறு இழுக்கும் போட்டியில், யார் பக்கம் வலு இருக்கிறதோ, அவர்கள் ஒற்றைத் தலைமையை அலங்கரிப்பார்கள். அதே நேரத்தில் யார் தோற்றாலும், அது அதிமுகவை பிளவுப்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது.