‛20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து... மா.செ.,களுக்கு ரூ.4 கோடி பட்டுவாடா...’ அடித்து உருளும் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆர்மிஸ்!
‛‛அந்தந்த மாவட்ட செயலாளர்களிடமே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.8 லட்சமும் , மாநில செயலாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நிர்வாகிகளுக்கு ரூ.5 லட்சம்...’’
அதிமுகவில் யார் ஒற்றைத் தலைமையை ஏற்கப் போவது என்கிற யுத்தம் தொடங்கியிருக்கிறது. இரட்டைத் தலைமையாக இருந்த ஓபிஎஸ்-இபிஎஸ் மோதலில், இபிஎஸ் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், அந்த முன்னெடுப்பை பின்னால் இருந்து எடுத்தவர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. அதை புரிந்ததால் தான் ஓபிஎஸ், ஏறி அடிக்கிறார். ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன் வைத்தவர் இபிஎஸ் தான் ,என்பதை புரிந்து கொண்ட ஓபிஎஸ், தன் ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டிருக்கிறார்.
எண்ணிக்கை என்று பார்த்தால் ஓபிஎஸ் பக்கம் ஆட்கள் எண்ணிக்கை குறைவு தான். ஆனால், அவர் பிரியும் பட்சத்தில், அது அதிமுகவின் கணிசமான தொண்டர் எண்ணிக்கையை குறைக்கும் என்பதால், இபிஎஸ் தரப்பு இந்த விவகாரத்தை பிரச்சனையின்றி அணுகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியதுமே, எடுத்த எடுப்பில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை எழுந்தது. அதை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ், தனக்கு எதிரான சதி நடப்பதை உணர்ந்து உடனே கிளர்ந்தெழுந்தார். இப்போது, அதன் விளைவுகள், ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் யுத்தம் சமூகவலைதளத்தில் நடந்து கொண்டிக்கிறது.
இதனிடையே, அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ல் நடைபெற உள்ளது. அதற்காக சிறப்பு தீர்மானம் தயாராகி வரும் நிலையில், அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை அதில் நிறைவேற்றவும், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரிய அளவில் பணம் செலவழித்து வருவதாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக உசிலம்பட்டி கீதா என்கிற மதுரை அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ஒருவர்,
‛‛தொண்டர்களுக்கு மட்டும் என்ன
அவர்களுக்கும் கொடுங்கள்...
ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்ட உடன், 4 கோடிரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடமே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.8 லட்சமும் , மாநில செயலாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நிர்வாகிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’’
என்று , இபிஎஸ்., தரப்பை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த சக அதிமுக ஐடி விங்க்(இபிஎஸ் ஆதரவாளர்கள்), உசிலம்பட்டி கீதாவின் பதிவை பகிர்ந்து
‛‛இப்படி பொய்யான தகவல்களை பரப்பும் மதுரை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமா கட்சி தலைமை’’
என்று அவர் பற்றி தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.