செலுத்தப் போனது வேட்புமனு : செலுத்தியது அபராதம்: அ.தி.மு.க. வேட்பாளருக்கு நேர்ந்த பரிதாபம்
வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற குன்னூர் தொகுதி வேட்பாளருக்கு முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கப்பச்சி வினோத் என்பவர் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசிநாள் என்பதால், கப்பச்சி வினோத் இன்று குன்னூரில் வேட்புமனுத் தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
கொரோனா விதிகள் நடைமுறையில் இருப்பதாலும், தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசுவதற்கான அபாயம் இருப்பதாலும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வேட்பாளர் கப்பச்சி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்தனர். பின்னர் கப்பச்சி வினோத் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் என ரூபாய் 5 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினார். பின்னர், வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற ஆளுங்கட்சி வேட்பாளர் அபராதம் செலுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.