‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
’வத்திக்குச்சியை கொளுத்திப் போடக்கூட நாட்கணக்கில் யோசித்து, கிடைத்த வாய்ப்பையெல்லாம் கோட்டை விடுகிறது த.வெ.க. அரசியல் சாணக்கியர்கள் அணிவகுக்கும் அந்த கட்சியில், இதுபோன்ற ஐடியாக்களை கூட இல்லை’

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக, பூத் வாரியாகவே களமாடத் தொடங்கிவிட்டது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னெடுக்கும் முதல் கட்சி
இந்நிலையில், தன்னுடைய ஆஸ்தான வாக்குகளான கிறிஸ்துவர்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் இந்த முறையும் அப்படியே வாங்குவதற்கு, எல்லா வியூகங்களையும் கையிலெடுத்திருக்கிறது திமுக. குறிப்பாக, தமிழ்நாட்டில் முதல் கட்சியாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னெடுத்து நடத்துகிறது திமுக.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும் திருச்சி கிழக்குத் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான இனிக்கோ இருதயராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவை பட்டாளமே பங்கேற்கவுள்ளது. திருச்சி எம்.எல்.ஏவான இனிக்கோ இருதயராஜ், இந்த கிறிஸ்துமஸ் விழாவை நடத்துவது நெல்லையில். அதற்கு காரணம் உண்டு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிறிஸ்துவர்களின் வாக்குகள் அதிகம் உண்டு. அந்த கணக்கில்தான் இனிக்கோ இருதயராஜ் கிறிஸ்துமஸ் விழாவை நெல்லையில் நடத்துகிறார். அந்த மதத்தினர் வாக்குகளை அறுவடை செய்வதற்கான முக்கிய முன்னெடுப்பு இது.
தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெறும் கிறிஸ்துமஸ் விழா
மற்ற நாட்களில் கிறிஸ்துமஸ் விழாவையோ, ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது தேர்தல் காலம். அதுவும் சிறுபான்மையினர் வாக்குகள் என்பது தமிழ்நாடு தேர்தலில் டிசைடிங் ஃபேக்டர். அந்த வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பதை திமுக நன்கு உணர்ந்திருக்கிறது. அதனால்தான், முதல் கட்சியாக கிறிஸ்துமஸ் விழாவை இந்த முறை பிரம்மாண்டமாக நெல்லையில் நடத்துகிறது.
அதே நேரத்தில், தன்னை கிறிஸ்துவர் என்று விஜய் அடையாளப்படுத்தி, அந்த வாக்குகளை கவர முயறிசித்து வரும் நிலையில், திமுகவின் இந்த முதல் முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கோட்டையை தக்க வைக்கும் முனைப்பில் திமுக, கோட்டை விடும் த.வெக!
தேர்தல் நேரத்தில் ஒரு தீப்பொறிக் கூட பெருங்காட்டையே அழித்துவிடும் காட்டுத் தீயாக மாறும். அப்படியான நேரத்தில், ஒரு வத்திக்குச்சியை கொளுத்திப் போடக்கூட நாட்கணக்கில் யோசித்து, கிடைத்த வாய்ப்பையெல்லாம் கோட்டை விடுகிறது தமிழக வெற்றிக் கழகம். அரசியல் சாணக்கியர்கள் அணிவகுக்கும் அந்த கட்சியில் விஜய்க்கு இதுபோன்ற ஐடியாக்களை கூட முதலில் சொல்ல முடியாத அளவிற்குதான், அங்கு வியூக வகுப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது அக்கட்சியினரே மறைமுகமாக சொல்லும் மனக்குமுறல்.
விஜயை தடுக்கும் சக்திகள் – தப்பிப்பிழைப்பாரா விஜய் ?
வழக்கமாக திமுக முன்னெடுக்கும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை, இந்நேரம் விஜய் பிரம்மாண்டமாக முதலில் முன்னெடுத்திருக்க வேண்டும். தன்னை கிறிஸ்துவர் என்று அடையாளப்படுத்த, ஜோசப் விஜய் என்று லெட்டர் பேடில் போட்டுவிட்டு, வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தால் மட்டும் போதாது. அந்த மக்களின் மனங்களை வெல்ல, இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது அரசியல் அரிச்சுவடித் தெரியாதவர்களுக்கு கூட தெரியும் பாலபாடம். ஆனால், இதைக் கூட விஜயை செய்யவிடாமல் சிலர் தடுத்து வருகிறார்கள் என்பது அக்கட்சி நண்பா, நண்பிகளின் எண்ணம்.
முக்கிய காரணம் தெரிந்த இனிக்கோ, முயற்சி செய்யாத த.வெ.க
திமுகவில் ஏ.வ.வேலு, கே.என்.நேரு போன்ற ஜாம்பாவன்கள் எப்படியோ, அப்படிதான் இனிக்கோ இருதயராஜூம். கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கைபெற்ற செயல்வீரர். 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் இதுபோன்ற கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி வந்தாலும், இந்த முறை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த கிறிஸ்துமஸ் விழாவை நடத்துவதற்கு முக்கிய காரணம் விஜய். இதை கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த இனிக்கோ இருதயராஜூ உணர்ந்திருக்கும் நிலையில், இதைக் கூட உணர்ந்து செயல்படாதவர்களாக விஜயை சுற்றியிருப்பவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் ’புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை’ என்று ஒரு கட்சி தலைவரின் உரையில் கள நிலவரம் என்னவென்பதே தெரியாமல் அவர்கள் அதை எழுதிக்கொடுத்தனர். சினிமாவில் வசனம் பேசுவது மாதிரி அதை விஜயும் பேசினார்.
ஆலமரத்தை அசைத்து பார்க்க நினைத்தால் மட்டும்போதுமா?
கூட்டங்களில் Blast, Blast என்று சொல்லி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினால் மட்டும் பத்தாது. களத்தில் அந்த Blastயை ஏற்படுத்தும் வகையில் களமாட வேண்டும். தேர்தல் அரசியல் ஒன்றும் சினிமா அல்ல அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டே அமைச்சரவையை மாற்றுவதற்கு.
கிளைக் கழகம் வரை ஆழமான வேர்களை பரப்பியிருக்கும் திமுக என்ற ஆலமரத்தை அசைத்துப் பார்க்க நினைத்திருக்கும் விஜய்க்கு உண்மையான களநிலவரத்தை சொல்லாமல், ‘நீங்க தான் முதலமைச்சர்’ என்ற ஆசை வார்த்தைகளை மட்டுமே கூறி, அவரை பகடைக்காயாக வைத்து, ஏமாற்றும் கூட்டம் விஜயை சுற்றியிருக்கும் வரை, வெளியில் வந்து எழுதிக்கொடுப்பதை படிப்பதை தவிர, அவரால் வேறு ஒரு தாக்கத்தையும் அரசியல் களத்தில் ஏற்படுத்த முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
காற்றில், காத்தாடி விடலாம். கத்திச் சண்டைப் போட்டு, காற்றை கிழித்தெறிவேன் என்றால் எப்படி?






















