கொரோனாவை வீழ்த்த ராமதாஸ் கூறிய 4 யோசனைகள்
‘கொரோனா வைரஸ் தொற்றும் ஒரு மனிதரிடமிருந்து, இன்னொரு மனிதருக்கு பரவாமல் தடுப்பது ஒன்றுதான் புதிய திரிபு உருவாகாமல் தடுப்பதற்கான வழி ஆகும். அதற்கான முதல் தேவை எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது தான். இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும், கொரோனா புதிய உருமாற்றம் அடைவதை தடுக்கும் ஒரு போர் வீரர் ஆகிறார்’ என்று ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தையே மிரட்டிவரும் கொரோனா பெருந்தொற்றை வீழ்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் நான்கு யோசனைகளை கூறியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரசுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான ஆபத்தான பந்தயத்தில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும். எப்படி? கொரோனா தொற்றை தடுக்கும் மனிதர்களின் வேகமும் கொரோனா வைரசின் உருமாற்ற வேகமும் ஒன்றுக்கொன்று ஓட்டப்பந்தயமாக தொடர்கிறது. இந்த பந்தயத்தில் மனிதர்கள் தோற்றுவிடக் கூடாது” என்றார்.
கொரோனா வைரஸ் மிக வேகமாக உருமாற்றம் பெருகிறது. அதிவேகமாக பரவும் ஆற்றல், குழந்தைகளை அதிகமாக பாதித்தல், தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றுதல் ஆகிய தன்மைகளுடன் புதிய திரிபுகள் உருவானால், கற்பனைக் கெட்டாத கேடுகள் நிகழக் கூடும்.
யோசனை 1 :
கொரோனா வைரஸ் தொற்றும் ஒரு மனிதரிடமிருந்து, இன்னொரு மனிதருக்கு பரவாமல் தடுப்பது ஒன்றுதான் புதிய திரிபு உருவாகாமல் தடுப்பதற்கான வழி ஆகும். அதற்கான முதல் தேவை எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது தான். இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும், கொரோனா புதிய உருமாற்றம் அடைவதை தடுக்கும் ஒரு போர் வீரர் ஆகிறார்.
யோசனை 2
தடுப்பூசிக்கு அடுத்ததாக, பொது முடக்கத்தை தீவிரமாக நடைமுறை படுத்துதல், முக கவசத்தை முழு அளவில் கட்டாயப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை அதிகமாக்குதல், கொரோனா தொற்றியவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிதல், தவிர்க்க இயலாமல் வெளியிடங்களுக்கு செல்வோர் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுதல் ஆகிய நடைமுறைகள் மிக மிக அவசியமாகும்.
யோசனை 3
கொரோனா காரணமாக மக்கள் பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் அரசாங்கம் ஓரளவுக்கேனும் நிதி உதவி அளிக்க வேண்டும்.
யோசனை 4
மூன்றாம் அலை உருவாகாமல் தடுக்க, கொரோனா வைரஸ் மரபணுவில் திரிபு ஏற்படுவதை தீவிரமாக கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாகும். மொத்த கொரோனா தொற்றாளர் மாதிரிகளில், 5% மாதிரிகளை மரபணு தொடரை வரிசைப்படுத்துதலுக்கு (genome sequencing) உட்படுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், இந்தியாவில் இது 0.05% அளவுதான் நடப்பதாக கூறப்படுகிறது. இப்பணிகளை மத்திய அரசு பன்மடங்கு அதிகமாக்க வேண்டும்.
மொத்தத்தில், கொரோனா வைரஸ் மீண்டும் புதிய வடிவம் எடுத்து, தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கக் கூடிய நிலை வந்துவிடக் கூடாது என்கிற அவசர நிலையில் நாம் இருக்கிறோம். இந்த பேராபத்தை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லோரும் ஒரு திசையில் செயல்பட்டு கொரோனா வைரசுக்கும் மனிதர்களுக்குமான பந்தயத்தில், மனிதர்கள் வெற்றி அடைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று மாநிலத்திலே முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் நேற்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.