Perarivalan Case Verdict: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி..
ராஜுவ் காந்தி கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன்(Perarivalan) தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம்(Supreme Court) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில்(Rajiv Gandhi Assassination Case) கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.
விசாரணையின்போது, ``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்.
அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செயல்படுங்கள் என்று ஆளுநருக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார். தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி தான் நடக்கும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிபப்டையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர்; அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருவது ஆளுநரின் வேலை; அதை உடனே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர்; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்துவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதங்களை எடுத்து வைத்திருந்தனர்.
இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் இன்று வழங்கினர்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை விவகாரத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதன் காரணமாக ஜாமீனில் உள்ள அவரை தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்து நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான, போபண்ணா, கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.