திருவாரூரில் நடந்த மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்
பல துறையை சார்ந்த அதிகாரிகள் கையில் செல்போனை வைத்துக்கொண்டு முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்திக்கொண்டு கூட்டத்தை கவனிக்காமல் செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருந்தனர்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு புகார் பெட்டி வைக்கப்பட்டு அதன் மூலமாக புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததையடுத்து கடந்த இரண்டு மாத காலமாக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அதிக அளவில் மனுக்களாக வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அரசு அலுவல் காரணமாக வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் துறை வேளாண் துறை பொதுப்பணித் துறை காவல்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து 175 மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெறுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் கண்மணி ஆகிய இரண்டு அதிகாரிகள் மட்டும் மனுக்களை பெற்றனர்.
அதே நேரத்தில் கூட்டத்திற்கு வந்த பல துறையை சார்ந்த அதிகாரிகள் கையில் செல்போனை வைத்துக்கொண்டு முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்டவைகளை பயன்படுத்திக்கொண்டு கூட்டத்தை கவனிக்காமல் செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்துக் கொண்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களின் குறைகளைப் போக்குவதற்காக நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள அதிகாரிகள் அதனை கவனிக்காமல் செல்போனை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும், நான்கு மணி நேரம் நடைபெறும் இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இதே போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.