Mysuru Lockdown: 300 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து மகனுக்கு மருந்து வாங்கிய தந்தை!
ஒரு நாள் கூட தவறாமல் மருந்து அருந்த வேண்டும், இல்லையெனில் நிலைமை சிக்கலாகிவிடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதால் மகனை காக்க சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஆனந்த்.
கர்நாடக மாநிலத்தில் நிலவும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மகனின் சிகிச்சைக்கு மருந்து வாங்க செல்ல முடியாத தந்தை, 4 நாட்களில் 300 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்துக் கொண்டு சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு அருகே உள்ள கணிகணக்கோப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய கூலி தொழிலாளி ஆனந்த். நரம்பியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தனது 10 வயது மகனுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கூட தவறாமல் மருந்து அருந்த வேண்டும், இல்லையெனில் நிலைமை சிக்கலாகிவிடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி இருந்தனர். நிலைமை இப்படி இருக்க இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெங்களூரு அருகே உள்ள மூளை மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் இவர் இலவசமாக மருந்துகளை பெற்று வந்தார். ஆனால் கர்நாடகாவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணத்தால் இவரின் மருந்து வாங்கும் பயண திட்டம் பாதிக்கப்பட்டது.
எப்படி மருந்து வாங்க செல்வது என ரயில் பயணம் தொடங்கி பல யோசனை மேற்கொண்ட ஆனந்த், நண்பர்கள் சிலரிடம் பைக் கடனாக கேட்டுள்ளார், ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள சூழலில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால் பலர் உதவ மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் சைக்கிள் தான் ஒரே வழி என முடிவு செய்த ஆனந்த், கோவிலில் தங்கி, கிடைத்த இடத்தில் உணவு உண்டு தேசிய ஆராய்ச்சி மையத்தை அடைந்துள்ளார். அங்கே இவரின் அவசரம் புரிந்த செவிலியர் உடனடியாக மருந்து கிடைக்க வழிவகை செய்துள்ளார். மேலும் இவரின் பயணத்தை அறிந்த மருத்துவர் 1000 ரூபாய் பணம் வழங்கி ஆனந்தை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் 300 கிமீ தூரத்தை 4 நாட்களில் சைக்கிளில் கடந்து தன மகனுக்கு தேவையான மருந்தை வாங்கி வந்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர் "என் மகன் சிகிச்சை எந்த விதத்திலும் தடை படவில்லை என்பதில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார். மேலும் "தொடர்ந்து சைக்கிள் மிதித்ததால் வயிற்றில் வலியை உணர்ந்தேன், அதற்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன், தற்போது மீண்டும் வேலைக்கு செல்ல துவங்கிவிட்டேன்" என தெரிவித்துள்ளார்
மகனின் உயிரை காக்கும் சிகிச்சைக்காக மருந்து வாங்க சைக்கிளில் பயணம் மேற்கொண்ட தந்தையின் பாதங்களுக்கு முத்தங்கள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.