தமிழர் மரபில் இணைந்த தைவான் காதல் ஜோடி: சித்தர் பீடத்தில் தமிழ் முறை திருமணம்! நெகிழ்ச்சியில் உலக தமிழர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடி தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த காரைமேடு சித்ததர்புரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர் பீடத்தில், தைவான் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்து முறைப்படித் திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேஷ்டி, பட்டுச் சேலை அணிந்து வந்த அவர்களது தைவான் நாட்டு உறவினர்கள் தமிழர்களின் மரபுபடி மணமக்களை வாழ்த்தியது அங்கு கூடியிருந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
ஒளிலாயம் சித்தர் பீடத்தின் ஆன்மிகச் சிறப்பு
சீர்காழியை அடுத்த காரைமேடு பகுதியில் அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர் பீடம், ஒரே இடத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் சிறப்புமிக்க தலமாகும். இப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட இந்தச் சித்தர் பீடத்தில், 18 சித்தர்களுக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும், 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்த சிறப்பு மிக்க ஆன்மிக தலமான இந்தச் சித்தர் பீடத்தில் பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். இது, இந்தத் தலத்தின் உலகளாவிய ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

காதலை உறுதி செய்த தமிழ் முறைத் திருமணம்
தைவான் நாட்டைச் சேர்ந்த இளைஞரான டாகாங் மற்றும் இளம்பெண் டிங்வன் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் காதலை இந்திய மண்ணில், குறிப்பாக இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டு உறுதிப்படுத்த விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தை அறிந்த தமிழ் மரபு ஆர்வலர்களான நாடி செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நாடி மாமல்லன் ஆகியோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தனர்.

அதன்படி, தமிழ்நாடு வந்தடைந்த டாகாங் மற்றும் டிங்வன் இருவரும், ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தமிழ் முறைப்படிச் சடங்குகள் நிறைந்த திருமணத்தை மேற்கொண்டனர். திருமணத்தின் முக்கியச் சடங்குகளான 'அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும்' நிகழ்வுகள் செவ்வனே நடத்தப்பட்டன.
தமிழ்க் கலாச்சாரத்தில் திளைத்த தைவான் நாட்டினர்
இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தைவான் நாட்டிலிருந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வருகை தந்திருந்தனர். வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் இருந்து வந்திருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் தமிழர்களின் மரபைப் போற்றும் வகையில், ஆண்கள் பட்டு வேஷ்டியும், பெண்கள் அழகிய பட்டுச் சேலைகளும் அணிந்து கலந்துகொண்டனர்.

திருமணச் சடங்குகளின்போது, அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் மரபுகளைக் கவனித்து, மணமக்களைத் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வாழ்த்தினர். அவர்களின் இந்தக் கலாச்சார ஆர்வம், தமிழ் மண்ணின் பாரம்பரியத்திற்கு அவர்கள் கொடுத்த மதிப்பை வெளிப்படுத்தியது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களும், சித்தர் பீடத்தின் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இரு வேறு தேசத்துக் காதலர்கள், தமிழர்களின் தொன்மையான திருமணச் சடங்குகளைப் பின்பற்றி இணைந்தது, உலக அளவில் தமிழ்க் கலாச்சாரம் பெற்றுள்ள மதிப்பை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளதாக தமிழ் கலாச்சார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.





















