Rain Update: கொந்தளிக்கும் கடல் - உடைந்து விழும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை சுவர்
தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பிரதான மதில் சுவற்றிற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு முள்வேலி தடுப்பு சுவர் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
![Rain Update: கொந்தளிக்கும் கடல் - உடைந்து விழும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை சுவர் Mayiladuthurai tharangambadi Danish Fort Wall damage marine erosion -tnn Rain Update: கொந்தளிக்கும் கடல் - உடைந்து விழும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை சுவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/b2f5ba6325e874cc2b71d80a7f909ba71732685074351113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக மிதமான மழையானது பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பிரதான மதில் சுவற்றிற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு முள்வேலி தடுப்பு சுவர் இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 -ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மிதமானது முதல் சற்று கனமழை வரை பதிவாகி வருகிறது. மேலும் இதன் காரணமாக மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டேனிஷ் கோட்டை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கி.பி.1620 ஆம் ஆண்டு டென்மார்க் படைத்தளபதி ஓவ் கிட்டி என்பவரால் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. உலகப் புகழ்பெற்ற இந்த கோட்டை 1978 -ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. டேனிஷ் காலத்தில் கோட்டையை சுற்றி பாதுகாப்பிற்காக செங்கல் சுண்ணாம்பால் தடுப்பு சுவர்களை எழுப்பி இருந்தனர். அந்த சுவர் காலப்போக்கில் கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்டது.
கடல் அரிப்பு
இந்நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் டேனிஷ் கோட்டை தற்போது மூன்றாவது முறையாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கரைகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டை சுவர் பாதிப்பு
இதனால் கோட்டையின் பிரதான மதில்சுவருக்கு முன்னாள் உள்ள முள்வேலி தடுப்புசுவர் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நிவர் புயலின் போது இந்த முள்வேலி தடுப்புசுவர் கடல் அரிப்பால் இடிந்து விழுந்த நிலையில் மீண்டும் முள்வேலி சிறிது தூரம் மட்டுமே தடுப்புசுவர் அமைக்கப்பட்டது. கல்தடுப்பு சுவர் கோட்டையை பாதிக்காதவாறு முழுமையாக அமைக்கப்படாததால் மீண்டும் முள்வேலி தடுப்புசுவர் தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் சுற்றுலா தலத்தின் அடையாளமாக விளங்கும் டேனிஷ் கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எஞ்சிய பகுதியில் கல்தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் மழையளவு
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 13 செமீ மழையும், குறைந்த அளவாக 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை - 123.90 மில்லி மீட்டர், சீர்காழி -107.20 மில்லி மீட்டர் தரங்கம்பாடி - 102.60 மில்லி மீட்டர், கொள்ளிடம் - 100.20 மில்லி மீட்டர், மணல்மேடு 82 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 58.80 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 95.98 மில்லி மீட்டர் (10 செமீ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 574.70 மில்லி மீட்டர் ( 58 செமீ ) ஆகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)