நம்பிக்கைத் துரோகம்: வெற்றி பெற்று 3 ஆண்டுகள் ஆகியும் தொகுதி பக்கம் வராத வார்டு கவுன்சிலர்! பொதுமக்கள் ஆதங்கம்
சீர்காழி நகராட்சியின் 7 வது வார்டு பொதுமக்கள், தங்கள் வார்டு உறுப்பினரைக் காணவில்லை என கூறி, நகராட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியின் 7வது வார்டுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள், தங்கள் வார்டு உறுப்பினரைக் காணவில்லை என்று கூறி, அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இன்று நகராட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த நூதனப் போராட்டம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சீர்காழி நகராட்சி பொதுமக்களின் வேதனை
சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டு பகுதியில் வசிக்கும் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று மதியம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தங்கள் வார்டு நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகனை காணவில்லை என்றும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர் தேர்தலில் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கோரிக்கை வைத்தனர்.
நித்யா தேவி பாலமுருகன் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்று தற்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நிறைவடையப் போகிறது. ஆனால், இவ்வளவு நீண்ட காலத்தில் அவர் தனது வார்டான 7வது வார்டு பகுதிகளான கீழ மாரியம்மன் கோவில் தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, குமரன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பலமுறை அழைத்தும் இதுவரை ஒருமுறை கூட வந்து மக்களின் குறைகளைக் கேட்டறியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
"வெற்றி பெற்று மூன்று வருஷமாச்சுங்க. எலக்ஷன் அப்போ வீடு வீடா வந்து ஓட்டு கேட்டாங்க. இனிமே உங்க எல்லா தேவைகளையும் நான் பார்த்துக்குவேன், இந்த தெருவை சிங்காரத் தெருவா மாத்துவேன்ன்னு சொன்னாங்க. ஆனா, ஜெயிச்சதுக்கு அப்புறம் அவங்க முகத்தை பார்க்கவே இல்லை. எங்க பகுதிக்கு ஒரு அவசரத் தேவைன்னா கூட, நாங்க யாரை போய் பார்க்கிறதுன்னே தெரியலை. போன் பண்ணாலும் எடுக்கிறது இல்லை. அதனாலதான், இப்ப நாங்க அவரை 'காணவில்லை'ன்னு சொல்லி மனு கொடுக்க வந்திருக்கோம்," என்று மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவர் மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியல்
தேர்தல் சமயத்தில் 7வது வார்டு உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், கீழ்க்கண்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
*சாக்கடை வசதி: தெருக்களில் முறையான சாக்கடை வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. சுகாதாரச் சீர்கேட்டால் தொற்று நோய் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
*மழை நீர் வடிகால் வசதி: பருவமழைக் காலங்களில் தெருக்களில் வெள்ளம் தேங்கி நிற்பதைத் தடுக்க உரிய வடிகால் வசதி அமைத்துத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. தற்போது சிறிய மழைக்கே தெருக்கள் குளம் போல் காட்சி அளிக்கின்றன.
* மகளிருக்கான கழிவறை வசதி: அப்பகுதியில் வசிக்கும் பெண்களின் அடிப்படைத் தேவையாக உள்ள பொதுக் கழிவறை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.
* சுத்தமான குடிநீர் வசதி: போதுமான குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகக் கூறினர்.
* சாலை வசதி: சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள தெருச் சாலைகளைப் புதுப்பித்துத் தருவதாக அளித்த வாக்குறுதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் மீது பொறுப்பு மாற்றம்
நகர்மன்ற உறுப்பினரைக் காணாத நிலையில், தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் வார்டு உறுப்பினர் தனது கடமையைச் செய்யத் தவறியதால், நகர்மன்ற நிர்வாகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்து இந்த அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று சுமார் 30க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கையொப்பமிட்ட மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித்தனர்.
இந்த நூதன மனு, சீர்காழி வட்டாரத்தில் மட்டுமின்றி, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறினால், இது போன்ற போராட்டங்களை மக்கள் முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.






















