தந்தையின் 2 -ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மகன்கள் செய்த மகத்தான காரியம்..! என்ன தெரியுமா?
தன் தந்தை இல்லாவிட்டாலும் இப்பகுதி மக்களுக்காக அவர் செய்த சேவைகள் தொடர வேண்டும் என அவரது மகன்கள் எண்ணியுள்ளனர்.

தந்தையின் நினைவு தினத்தன்று மகன்கள் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கபணம், சத்தான உணவு பொருட்கள் மற்றும் ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கிய நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மிசா மதிவாணன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் அன்பழகன் மற்றும் ஸ்ரீதர் இவர்களது தந்தை மிசா மதிவாணன் தொடர்ந்து 30 ஆண்டுகள் செம்பனார்கோவில் திமுக ஒன்றிய செயலாளராக பணியாற்றி இப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார். கடந்த 2023 -ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

மதிவாணன் ராஜலட்சுமி அறக்கட்டளை
இந்நிலையில் தன் தந்தை இல்லாவிட்டாலும் இப்பகுதி மக்களுக்காக அவர் செய்த சேவைகள் தொடர வேண்டும் என அவரது மகன்கள் எண்ணியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது பெயரில் சேவைகள் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை மற்றும் தாய் பெயரில் மதிவாணன் ராஜலட்சுமி அறக்கட்டளை என்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கினர்.

உதவும் விதத்தில் அனுசரிக்கப்பட்ட நினைவு தினம்
மேலும் அதன் மூலம் தன் தந்தை விட்டு சென்ற சேவையை தொடரும் விதமாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை மதிவாணனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி செம்பனார்கோவில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதிவாணன் ராஜலட்சுமி அறக்கட்டளை சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்க பணம் கம்பு, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட சத்து மாவு அடங்கிய சத்துணவு பெட்டகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை
மேலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. மற்றும் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு கல்வி முழு தொகையும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நினைவு நாளில் மறைந்த மிசா மதிவாணனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அறக்கட்டளை சார்பில் 1000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. தந்தைக்கு மகன்கள் செய்த நினைவு நாள் விழா காண்போரை வியக்க செய்தது. மேலும் நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.





















