சீர்காழி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
சீர்காழி அருகே தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
சீர்காழி அருகே தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் பேரிகார்டில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்த காவலருக்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ராஜேஷ். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் நேற்றிரவு இரவு தனது தம்பி ராஜ்குமார் உடன் இருசக்கர வாகனத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலை வழியாக பயணித்துள்ளார். பணிகள் நடைபெற்று வரும் சூழலில் அவ்வழியில் திறக்கப்படாத மேம்பாலத்தில் சென்றபோது நத்தம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டில் மோதி ராஜேஷ் மற்றும் அவரது தம்பி இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் தலையில் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது தம்பி ராஜ்குமார் படகுகாயத்துடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காவலர் உயிர் இழந்தது குறித்து தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார்.
கோட்டையை மீட்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தொடரும் சஸ்பென்ஸ்!
சீர்காழியில் காவலர் உயிர் இழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்கு பிறகு ராஜேஷ் உடல் சீர்காழி ஈசானி தெருவில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது, முன்னதாக இறந்த ராஜேஷின் உடலுக்கு காவல்துறையினர் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.