கோட்டையை மீட்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தொடரும் சஸ்பென்ஸ்!
காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தலைமையிலான I.N.D.I.A கூட்டணியும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பல்வேறு மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். திருவனந்தபுரத்தில் சசி தரூர் மீண்டும் களமிறங்குகிறார். 9 மாநிலங்களில் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமேதியில் களம் காண்பாரா ராகுல் காந்தி?
இந்த கூட்டத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா, சத்தீஸ்கரில் மீதமுள்ள தொகுதிகளுக்கும் ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வயநாட்டை தவிர்த்து அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தியை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் கடந்த முறை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
ஆனால், இந்த முறை, கோட்டையை கைப்பற்றிவிடும் நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கோட்டையாக கருதப்படும் ரே பரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க கட்சி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினரான சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினரான நிலையில், அந்த தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமேதி, ரே பரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களை போட்டியிட வைக்க உத்தர பிரதேச காங்கிரஸ் தேர்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.