TN BJP Candidates : ’நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி?’ பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் இதுதான்..!
’அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார் என்ற தகவலை பாஜக தலைமை இது வரை உறுதி செய்யாத நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது’
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், அவரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று மத்திய பாஜக தலைமை விரும்புவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு முதலில் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒன்பதே மாதங்களில் அவர் பாஜகவின் மாநில தலைவராக அதிரடியாக நியமிக்கப்பட்டார்.
அதிரடியாக நியமிக்கப்பட்ட அண்ணாமலை
அவரை பாஜக தலைமை மாநில தலைவராக நியமிக்கும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. எல்.முருகனுக்கு அடுத்து மாநில தலைவர் பதவியை பிடிக்க எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் காய் நகர்த்தினர். ஆனால், பாஜக தலைமையின் சதுரங்கம் வேறு விதமாக அமைந்தது. அவர்கள் அண்ணாமலைக்கு மாநில தலைவர் என்ற வாய்ப்பை வழங்கினர்.
கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்த திமுகவை சேர்ந்த செந்தில்பாலாஜியை எதிர்த்து அரவக்குறிச்சியில் போட்டியிட்டார். ஆனால், அண்ணாமலையால் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு பிறகு மீண்டும் மாநில தலைவர் மாற்றப்படுவார் என்ற பேச்சுக்கள் பாஜகவில் எழுந்தன. ஆனால், டெல்லி பாஜக தலைமை அண்ணாமலைதான் மாநில தலைவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
பாஜக சார்பில் யார் யார் போட்டி ?
இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் யார் யார் எல்லாம் வேட்பாளர்களாக அறிவிக்கப்படப்போகின்றார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்தார். ஆனால், அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் அமித் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இது வெறும் வதந்திதான், உண்மையில்லை என்றும், தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப்போவதில்லை எனவும் பாஜக மாநில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் போட்டியிடவிருக்கும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது.
பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் |
|
தென் சென்னை |
ஹெ.ராஜா |
மத்திய சென்னை |
வினோஜ் பி செல்வம் |
ஸ்ரீபெரம்பதூர் |
காயத்திரி தேவி |
திருச்சி |
பேரா. சீனிவாசன் |
தஞ்சாவூர் |
கருப்பு. முருகானந்தம் |
பெரம்பலூர் |
பாரிவேந்தர் |
தென்காசி |
ஆனந்தன் அய்யாசாமி |
விருதுநகர் |
ராதிகா சரத்குமார் |
தூத்துக்குடி |
சசிகலா புஷ்பா |
வேலூர் |
ஏ.சி.சண்முகம் |
கன்னியாகுமரி |
விஜயதரணி |
நெல்லை |
நயினார் நாகேந்திரன் |
கோவை |
உத்தம ராமசாமி அல்லது அண்ணாமலை |
- சிவகங்கை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தென் சென்னையில் போட்டியிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏற்கனவே, மத்திய சென்னை தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்ட பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்திற்கு அந்த தொகுதி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தபோது அதற்கான முழு ஏற்பாட்டையும் வினோஜ் பி செல்வம் செய்திருந்தார்.
- தென்காசி தொகுதியை பொறுத்தவரை அந்த தொகுதியில் நன்கு அறியப்படும் நபராகவும் பல்வேறு சமூக சேவைகளை செய்து மக்கள் சேவகர் என்று அழைக்கப்படுபவருமான ஆனந்தன் அய்யாசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. பல்வேறு கல்லூரிகள், மாணவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வரும் ஆனந்த் அய்யாசாமிக்கு தென்காசி இளைஞர்கள் மத்தியில் நல்ல பரிட்சியம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்படவிருக்கிறது. ஆனால், இந்த தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கேட்டாலும், அவருக்கு வேறு தொகுதியை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- தஞ்சையில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கும் பாஜக-வை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு தஞ்சை அல்லது ராமநாதபுரம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. தஞ்சை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கோ ஒதுக்கப்படலாம்.
- கன்னியாகுமரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்று இருந்த நிலையில், புதிதாக இணைந்த விஜயதரணிக்கு இந்த முறை ஒதுக்கப்படலாம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கோவை தொகுதியில் போட்டியிட முன்னாள் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, தற்போதைய மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் ஆகியோர் காய்நகர்த்தும் நிலையில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை, பாஜக தேசிய தலைமை சொன்னால் அண்ணாமலையே இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது.