Cyclone Ditwah; நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
தமிழகத்தை டிட்வா'புயல் நெருங்கி வரும் நிலையில், இன்று மாலை முதல் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நெருங்கும் 'டிட்வா' புயல்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது. வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயலாக வலுப்பெற்றது.இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இலங்கையை புரட்டி போட்ட புயல்
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள `டிட்வா' புயல், தமிழகத்தை நோக்கி மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் இதன் வேகம் 7 கி.மீ குறைந்துள்ளது. தற்போது சென்னையிலிருந்து 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், வரும் 30ம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் பாதிப்பு தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், 'டிட்வா' புயல் இலங்கையில் நிலத்தைத் தொட்டு பலவீனமடைந்த நிலையில் தற்போது திறந்த கடற்குச் செல்கிறது
'டிட்வா' புயல் இலங்கையின் மலைப்பகுதிகளுக்குள் சென்று மிகவும் பலவீனமடைந்துள்ளது. மீண்டும் திறந்த கடலுக்குச் சென்றவுடன் இது மீண்டும் வலுபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த புயலால் இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்றுதான் இலங்கையில் கடும் மழையின் கடைசி நாள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
தென், டெல்டா மாவட்டங்களில் இன்று மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி கடற்கரை, ராமநாதபுரம் கடற்கரை பகுதிகள், நாகை, தஞ்சாவூர் தெற்குப் பகுதிகள், புதுக்கோட்டை கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதிக கனமழை,அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லையெனவும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.






















