Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals IPL: ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்பனை செய்ய, அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajasthan Royals IPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனைக்கு?
ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, வரும் 2026ம் ஆண்டு சீசனுக்கு முன்பாகவே வேறொரு நபருக்கு விற்பனை செய்ய, உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பல நிறுவனங்கள் உடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 2008ம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டபோதே, சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வரவுள்ளதாம்.
வதந்தியா? உண்மையா?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒன்று அல்ல இரண்டு அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ஐபிஎல் அணிகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றனவாம். இன்றைய மக்கள் வலுவான மதிப்பீடுகளைப் பணமாக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே விற்பனைக்கு இரண்டு அணிகள் மற்றும் 4/5 சாத்தியமான வாங்குபவர்கள் இருக்கின்றனர். இந்த அணிகளை சொந்தமாக்குபவர்கள் புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருக்குமா?” என பதிவிட்டுள்ளார். ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமமானது (எமர்ஜிங் மீடியா ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸ் லிமிடெட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 65% பங்குகளைக் கொண்டுள்ளது. லாச்லன் முர்டோக் மற்றும் ரெட்பேர்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களாக உள்ளனர்.
I hear, not one, but two IPL teams are now up for sale- RCB and RR. It seems clear that people want to cash in the rich valuations today. So two teams for sale and 4/5 possible buyers! Who will be the successful buyers- will it be from Pune, Ahmedabad, Mumbai, Bengaluru or USA?
— Harsh Goenka (@hvgoenka) November 27, 2025
2 பில்லியன் எதிர்பார்க்கும் ஆர்சிபி?
விராட் கோலியை சுற்றி கட்டமைக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு இந்த ஆண்டு கோப்பையை வென்று அசத்தியது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு இந்த அணியின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டது. ஆனால், கோப்பையை வென்றதன் விளைவாக அந்த அணியின் மதிப்பானது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதற்கு நிகரான விற்பனையை நிர்வாகம் எதிர்பார்க்கிறதாம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை செயல் அதிகாரியான பூனவல்லா, ஆர்சிபி அணியை வாங்க தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.
ராஜஸ்தான் அணியின் மதிப்பு என்ன?
முதல் சீசனில் கோப்பையை வென்றாலும், அதன் பிறகு ராஜஸ்தான் அணி பெரிதாக சாதிக்கவில்லை என்பதே உண்மை. நாக்-அவுட் சுற்றுகள் வரை வென்றாலும், கோப்பைக்கான காத்திருப்பு என்பது 18 ஆண்டுகளாக நீடிக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிர்வாகமாக நற்பெயர் பெற்றாலும், சூதாட்ட புகார்கள் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டு தரவுகளின்படி, ராஜஸ்தான் ராயல் அணியின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கருதப்படுகிறது.




















