2161 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி 2161 மாணவிகளுக்கு வங்கி பற்றட்டைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு 2161 மாணவிகளுக்கு வங்கி பற்றட்டைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பேச்சு
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் பேசுகையில், “அனைத்து மாநிலங்களிலும் தலையாய முன்னேறிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அந்த அளவிற்கு தமிழ்நாடு அரசானது, பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது. இந்த புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு இன்று விரிவாக்கப்பட்டுள்ளது.
பயன்பெறும் 29 கல்லூரி மாணவிகள்
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 75,028 மாணவிகள் பயனடைய உள்ளனர். நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் 2161 பேர் 29 கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற நாடுகள் உலகளவில் முன்னேற காரணம் கல்வி மட்டுமே. ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால், அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்றால் கல்வி கற்பதே முக்கியமாக உள்ளது. அந்த காலத்தில் 5-ம் வகுப்பு படித்தாலே பெரிய விஷயம், ஆனால் தற்போது அந்நிலை மாறி டிகிரி படிப்பு, அதற்கு மேலும், பி.எச்.டி போன்ற படிப்புகளை நாம் தெரிவுசெய்து படிக்கும் போது நம் அறிவும், நாமும் முன்னேற முடியும். அதற்காக நம் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறது.
புரட்சிகரமான திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது ஒரு இன்றியமையாத திட்டம். நிறைய கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உள்ளது. மேல்நிலை படிப்புகளில் நம் தமிழ்நாடு முன்னேறி உள்ளது. பெண்கள் கல்வி பயின்றால் அவர்களின் வாழ்க்கைக்கும், உயர்விற்கும், நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் தற்போது உள்ளனர். அதில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. அதில் ஒரு திட்டமாக இந்த புதுமைப்பெண் திட்டம். இது அவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்களின் மாணவிகள் தட்டச்சு, கணினி வகுப்புகள் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டு பயன்பெறும் வகையில் இந்த புதுமைப்பெண் திட்டம் இருக்கும். இது ஒரு புரட்சிகரமான திட்டம். இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நீங்கள் ஆராய்ச்சி அளவில் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். நேற்றிரவே உங்களது வங்கி கணக்கி இந்த தொகையானது செலுத்தப்பட்டு விட்டது. 1992-ல் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாயும், ஒரே குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என இரு குழந்தைகளுக்கும் வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசைநிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்த முதிர்வுத்தொகையை அந்த குழந்தைகளின் படிப்பிற்கு பயன்படும் வகையில் உள்ளது.
திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும்
டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண நிதியுதவி திட்டம் மற்றும் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பெண்கள் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசானது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. இவ்வாறான திட்டங்களை நாம் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா 90 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள அக்கனாங்குளம், அங்காளம்மன் குளம், மட்டக்குளம், ஐயன்குளம், மாமரத்துமேடைகுளம் ஆகிய குளங்களை தூய்மையாக பராமரிக்க தன்னார்வலர்களுக்கான ஒப்பந்த ஆணையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஷ்வரிசங்கர், மாவட்ட சமூகநல அலுவலர் எஸ்.சுகிர்தா தேவி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.