பரபரப்பு....ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் - உயிர் தப்பிய பயணிகள்..!
சீர்காழி அருகே பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழண்டோடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழண்டோடிய நிலையில் அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
அரசு பேருந்துகள் குறித்த விமர்சனங்கள்
சமீப காலமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்து, பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனம் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது, செல்லும் வழியில் படிக்கட்டு தனியாக கழண்டு விழுந்தது, கோடை மழையின் போது பேருந்தில் உள்ளே சரசரவென மழை பெய்தது என அரசு பேருந்துகள் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வடரங்கம் கிராமம்
இந்நிலையில் அதற்கு எடுத்துக்காட்டாக மற்றொரு சம்பவமாக சீர்காழி அருகே நடைபெற்று உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது வடரங்கம் கிராமம். அக்கிராம மக்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம் என அனைத்து தேவைகளுக்கும் அருகில் உள்ள சீர்காழி நகரத்தையை சார்ந்து உள்ளனர். அப்பகுதி மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரசு பொது போக்குவரத்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு பேருந்தில் கழண்டோடிய சக்கரம்
இந்த சூழலில் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற கும்பகோணம் அரசு பேருந்து கழகம் சீர்காழி கிளையை சேர்ந்த அரசு பேருந்து, சுமார் 60 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் வலது புற முன் சக்கர திடீரென கழண்டு பேருந்தில் இருந்து தனியாக சாலையில் ஓடி உள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் உயிர்ச்சேதம் இன்றி தப்பினர்.
அரசு பேருந்துகள் சமூக ஆர்வலர்களின் கருத்து
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கான விதிகளையும் ஒதுக்கீடு செய்கிறது. மேலும் பேருந்து வசதிகளுக்காக அவ்வப்போது ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை வாங்கி வருகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஓடும் பேருந்துகள் முற்றிலும் சாலையில் ஓட தகுதியற்ற நிலையில் இருக்கின்றது. அதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று அவைகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது இவற்றையெல்லாம் அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக சாலையில் ஓட தகுதியற்ற பேருந்துகளை அனைத்தையும் அகற்றிவிட்டு குறிப்பாக கிராமப்புறங்களில் ஓடும் பேருந்துகளை புதிய பேருந்துகளாக மாற்றி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.