ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை; 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம் - பொதுமக்கள் வேதனை
இதுவரை நிதி விடுவிக்கப்படாததால் ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.
ஆறு ஆண்டுகளாக அரசு நிதி விடுவிக்கப்படாததால் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத வாடகை கட்டிடத்தில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
94 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சீர்காழி தாலுக்கா
தமிழகத்தில் கடைசி 38வது மாவட்ட மயிலாடுதுறை மாவட்டம் இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகள் உள்ளன. சீர்காழி தாலுக்கா 94 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நிலையில் இந்த 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான இருப்பிட சான்று, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை, குடும்ப அட்டை போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான சான்றுகளை பெறுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் தாலுக்கா அலுவலகம்
இந்த சூழலில் முன்பு செயல்பட்டு வந்த பழைய தாலுக்கா அலுவலக கட்டடம் சேதம் அடைந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு வாடகைக்கு மாற்றப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய கட்டிடம் கட்ட கடந்த 2017 -ஆம் ஆண்டு 1 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகளு ஏதும் தொடங்கவில்லை. அதன் பிறகு தற்போது 4 கோடியே 85 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இன்றி அவதி
இதுவரை நிதி விடுவிக்கப்படாததால் ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வாடகை கட்டடமும் மிகவும் பழமையான என்பதால் பொது மக்கள் மற்றும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு போதிய கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வரும் பெண்கள் வயதானவர்கள் பெரிதும் பாதிப்படைத்து வருகின்றனர். ஆகையால் அரசு புதிய வட்டாட்சியர் அலுவலகம் பணியை துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அதிமுக, திமுக என இரண்டு ஆட்சியர் நடைபெற்ற நிலையில் இதுவரை நிதி விடுவிக்கப்படாதது குறிப்பிட்டத்தக்கது.