யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!
இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்தி வரும் சோதனையில் உரிமம் பெறாத மது பானக்கூடங்களுக்கு சீல் வைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல்துறை நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது வகைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காரணமாக புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் விற்பனை தொடர்பாக நாள்தோறும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் குறைய தொடங்கியுள்ளது.
சாராயம் பறிமுதல்
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரைச் சேர்ந்த 44 வயதான தமிழரசன், சோழம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சங்கர், முத்தூரை சேர்ந்த 28 வயதான சரண்ராஜ், நல்லூர் சேர்ந்த 48 வயதான பரமசிவம், அனந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயதான மணி, சீர்காழி ஆர்ப்பாக்கத்தை சேர்ந்த 60 வயதான ராஜகுமாரி, மயிலாடு துறை சேந்தங்குடி சேர்ந்த 46 வயதான சக்தி, தாண்டவன்குளத்தை சேர்ந்த 30 வயதான ரமேஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி

அனுமதி இன்றி செயல்பட்ட பார்களுக்கு சீல்
மேலும், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த மற்றும் அருகே உள்ள மதுக்கூடங்களிலும் இது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், மாதானம் பெரியகொப்பியம், புத்தூர் மற்றும் புதுப்பட்டினம் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் உரிமம் பெறாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வண்ணம் மதுபானக்கூடம் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மூன்று மதுக்கூடங்களுக்கும், (பார்கள்) வட்டாட்சியர் ஜெயபாலன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட 42 வயதான பாபு விஜய், 50 வயதான கண்ணன், 44 வயதான சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மதுக்கூட உரிமையாளர்கள் முத்துராமன், சேகர் ஆகி யோரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!

டிஎஸ்பி எச்சரிக்கை
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் 38 கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அவற்றை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.






















