பெட்டிஷனுடன் தயாராக இருங்கள் மக்களே... "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" அடுத்த முகாம் இங்கேதான்...!
சீர்காழி தாலுக்காவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் வருகின்ற 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகின்ற ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
மக்களின் குறைகளை நேரில் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் நோக்குடன், தமிழ்நாடு அரசு புதுமையாக செயல்படுத்தியுள்ள “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு அரசு சார்ந்த உதவிகள் எளிதாக சென்றடைந்து வருகிறது.
24 மணிநேரம் ஆட்சியர் முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்களும் எதிர்வரும் 16.04.2025 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் 17.04.2025 வியாழக்கிழமை காலை 09.00 மணி வரை சீர்காழி வட்டத்தில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
அனைத்து துறை அதிகாரிகள்
இந்த இரண்டு நாட்களிலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் சீர்காழி தாலுக்காவில் அனைத்து அரசு அலுவலகங்களும் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும் அதிகாரிகள், ஒவ்வொரு கிராமத்திலும் பங்கேற்று அங்கு நிலவும் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் எந்த அரசு அலுவலகங்களுக்கும் செல்லாமல், தங்களது கிராமத்திலேயே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.
சீர்காழி தாலுக்காவில் முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்கும் சீர்காழி வட்டம், பல கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனி துறை அலுவலர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் நேரில் சென்று அந்தந்த கிராம மக்களின் நிலைமைகளை, தேவைகளை, மற்றும் புனரமைப்பு தேவைகளை கவனித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு
இந்த நிகழ்வில் பொதுமக்கள், தங்களது கிராமத்தில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு, குடிநீர், சாலை, வீதியியல், மின்சாரம், பள்ளிகள், மருத்துவ வசதி, வருவாய், விவசாயம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட துறைகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் தேவைகளை நேரில் கூறலாம். அதற்காக உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
படுக்கை அறைக்குள் இருந்த இளைஞர்! வசமாக சிக்கிய மத்திய அமைச்சரின் பேத்தி! கணவர் செய்த வெறிச்செயல்!
மாநில அளவில் இதுவரை நடைபெற்ற இந்த திட்டத்தின் கீழ், மக்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, பல்வேறு பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சீர்காழி வட்ட மக்களும் இந்த திட்டத்தின் மூலம் நன்மை பெறுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கூறுகையில், “இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரில் தெரிவிக்க வேண்டும். இது மக்களுக்கான திட்டம், மக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு நேரில் வருகிறோம். ஆகையால் இந்த முகாமில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.






















