டிட்வா புயல் தாக்கத்தால் கடலோர கிராமங்கள் கொந்தளிப்பு: பல்லாயிரக்கணக்கான படகுகள் நிறுத்தம் - வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்..!
டிட்வா புயலின் தீவிரம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் வரலாறு காணாத கடல் சீற்றம் காணப்படுகிறது.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலின் தீவிரம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை மற்றும் வரலாறு காணாத கடல் சீற்றம் காணப்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதியில் உள்ள சுமார் 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான கடல் சீற்றம்: 15 அடி வரை எழும் அலைகள்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக (டிட்வா) உருமாறியதன் விளைவாக, கடலோரப் பகுதிகளில் நிலைமை மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி, பூம்புகார், வானகிரி, திருமுல்லைவாசல், பழையார், கூழையார், தொடுவாய் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் அலைகள் 10 முதல் 15 அடி உயரம் வரை கொந்தளிப்புடன் எழுந்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக இந்தக் கொந்தளிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய மோசமான கடல் சீற்றம் மற்றும் வானிலை காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான படகுகள் நிறுத்தம்
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் படகுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடலோரத்தில் உள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரக்கணக்கான பைபர் படகுகளும் கரையோரங்களில், பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளைக் கடலின் சீற்றத்திலிருந்து காப்பாற்ற, மீனவர்கள் கூடுதல் கயிறுகளைப் பயன்படுத்தி அவற்றை பலமாக கட்டிவைத்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் கடல் அரிப்பைத் தடுக்கவும், படகுகளைப் பாதுகாக்கவும் அரசு சார்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்ட முழுவதும் இடைவிடாமல் மிதமான மழையினது பெய்து வருகிறது. மேலும் மிதமான காற்றும் சேர்ந்து வீசுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். குளிர்ந்த காற்றும், தொடர் மழையும் மக்களின் அன்றாட வேலைகளை முற்றிலும் பாதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சாலைகள் மற்றும் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
புயல் கரையை கடக்கும் வரை அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட பொதுமக்கள் வெளியே வர தயங்கி வருகின்றனர். புயல் எப்போது கரையை கடக்கும், இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது
மயிலாடுதுறை மாவட்டத்தின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாத் தலங்கலான பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் புயலின் தாக்கத்தில் சிக்கியுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிகளில் தற்போது ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடற்கரைப் பகுதியில் கடை வைத்திருப்போர் மற்றும் வணிகர்களின் வியாபாரமும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் புயல் அபாயம் குறித்து தொடர் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. மாவட்ட பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை நவம்பர் 30 -ஆம் தேதி அதிகாலை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை ("ரெட் அலர்ட்") விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புயல் கரையை நெருங்கும் வரை கனமழை மற்றும் கடல் சீற்றம் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.























