பொதுமக்கள் குறைகளை அலட்சியப்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் - விரக்தியில் மக்கள்..!
மயிலாடுதுறையில் பொதுமக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலட்சியப்படுத்தியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சின்ன மாரியம்மன் கோயில் தெருவில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். அதன் ஒன்றாக மயிலாடுதுறையிலும் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் புகார் கூற வந்த பொதுமக்கள்
இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், நகர்மன்றத் தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் மணல்மேடு அருகேயுள்ள காளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நிலவி வரும் மருத்துவப் பற்றாக்குறை குறித்து புகார் தெரிவிக்க வந்ததால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள் பற்றாக்குறை -அவதியுறும் பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே செயல்பட்டு வரும் காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபத்தில் இரண்டு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக புதிய மருத்துவர்கள் இன்னும் பொறுப்பேற்காததால், அந்த சுகாதார நிலையம் மருத்துவர்கள் இன்றி செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மருத்துவ வசதிகள் பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பழைய மருத்துவரே வேண்டும்
இந்த மருத்துவப் பற்றாக்குறை காரணமாக, தங்களுக்கு பழைய மருத்துவர்களே வேண்டும் என்றும் கோரி, காளி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், புதிய சுகாதார நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருந்தனர்.

பொதுமக்கள் குறைகளை அலட்சியப்படுத்திய மாவட்ட ஆட்சியர்
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தங்கள் குறைகளைக் கூற வந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை அணுகினர். ஆனால், பொதுமக்கள் தங்கள் குறைகளை நின்று கூட கேட்க மனமில்லாமல், அவர்களை விழாவிற்கு வெளியே வருமாறு மாவட்ட ஆட்சியர் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஆட்சியர் வெளியே வந்ததும் மீண்டும் தங்கள் குறைகளைக் கூறத் தொடங்கினர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பொதுமக்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், "விஷயம் எதுவாக இருந்தாலும் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கவும்" என்று கூறிவிட்டு, விழாவில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்டோருக்காக தன் கார் அருகே காத்திருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல வந்த இடத்தில், அவற்றைக் கேட்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், அதிகார குணத்துடனும், அலட்சியமாகவும் நடந்துகொண்டது, குறைகளைச் சொல்ல வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டன்
ஒருபுறம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஏற்கெனவே இயங்கி வரும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் நிலவுவது வேதனைக்குரியது. குறிப்பாக, அரசின் பிரதிநிதியாகிய மாவட்ட ஆட்சியரே மக்களின் குறைகளைக் கேட்க மறுத்து, அலட்சியமாக நடந்துகொண்டது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






















