Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
'தமிழ்நாடு வரும் அமித் ஷா பாஜக கூட்டணிக்குள் பல முக்கிய கட்சிகளை கொண்டுவரும் விதத்தில் அந்த கட்சிகளின் தலைவர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’

பீகார் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் பாஜக, இப்போது தன்னுடைய முழுக் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திருப்பியிருக்கிறது. சமீபத்தில் கோவை வந்த பிரதமர் மோடி, பீகார் தேர்தல் வெற்றி தமிழ்நாட்டிலும் 2026ல் எதிரொலிக்கும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், வரும் 7ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷாவை சந்தித்த ஒபிஎஸ்
அரசியல் களத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்ட சூழலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி சென்று அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில், அவர் பாஜகவில் சேரப்போகிறாரா? அல்லது செங்கோட்டையன் மாதிரி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொள்ளப் போகிறாரா என்ற பேச்சுகள் எழுந்தது. அமித் ஷாவிடம் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ள ஒ.பன்னீர்செல்வமும் அமித் ஷா தமிழ்நாடு வந்து சென்ற பின்னர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
அன்புமணி, பிரேமலதாவை சந்திக்கும் அமித் ஷா
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தி 2026 தேர்தலில் திமுகவிற்கு கடுமையான போட்டியை கொடுக்க வேண்டும் என்று அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதனால், அவர் தமிழ்நாடு வந்து பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம் உள்ளிட்டோரை அவர் சந்திக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகளை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முடிவிலேயே அமித் ஷா தமிழ்நாட்டு பயணம் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் இங்கு வந்ததும் ரகசியமாக சில முக்கிய கட்சிகளின் பிரமுகர்களை சந்திக்கவிருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதே நேரத்தில், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள டிடிவி தினகரனையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவரும் பேச்சுக்கள் அமித் ஷா வருகையின்போது நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக பூத் கமிட்டிகளை ஆய்வு செய்யும் அமித் ஷா
மேலும், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பின்னர் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, மாற்றங்கள் குறிப்பாக பூத் கமிட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் விவரங்களை விரிவாக அமித் ஷா ஆய்வு செய்யவுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுக்கும் அமித் ஷா
கடந்த 2021 தேர்தலில் கந்த சஷ்டி கவசம் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக மாநில தலைவராக அப்போது இருந்த முருகன், தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை மேற்கொண்டு, பாஜகவிற்கான ஆதரவை திரட்டினார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதில் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே நேற்று கடும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் வரை நடைபெற்று, அங்கு 144 தடை உத்தரவு ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகவும், அது பற்றி அமித் ஷா தன்னுடைய தமிழ்நாடு வருகையின்போது குறிப்பிட்டு பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு, அவரை மதுரை அழைத்துச் செல்ல பாஜக நிர்வாகிகள் முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.






















