சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Flight Cancel: "சென்னை விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது"

சென்னை விமான நிலையத்தில், நேற்று இரவு 8 மணியில் இருந்து, இன்று காலை 8 மணி வரை, 12 மணி நேரத்தில், மொத்தம் மொத்தம் 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் புறப்பாடு விமானங்கள் 19, வருகை விமானங்கள் 20. மேலும் இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மழை எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே, புயல் மழை காரணமாக விமானங்கள் தொடர்ந்து தாமதம், ரத்து ஆகி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது மழை ஓரளவு ஓய்ந்த பின்பும், நேற்று இரவு 8 மணியில் இருந்து, இன்று காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், அந்தமான், ஹைதராபாத், கௌஹாத்தி,பெங்களூர், விசாகப்பட்டினம், கொச்சி, கோவை மற்றும் இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட 19 இடங்களுக்கு செல்ல வேண்டிய, புறப்பாடு விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் அவதி
அதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, புவனேஸ்வர், ராய்ப்பூர், இந்தூர், புனே, கோவை உள்ளிட்ட 20 இடங்களில் இருந்து, சென்னை வரும் 20 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை போல் 12 மணி நேரத்தில், 39 விமான சேவைகள், சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த 39 விமானங்களும், இன்டிகோ ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், ஊழியர்கள், நிர்வாகம் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாகவும், சென்னையில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும், இதே போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.





















