Road Model: ரோட்-னா இப்படி இருக்கனும்..! கேபிள்களே இல்லை, விபத்துக்கு “நோ” - தமிழகத்திற்கான சாலை மாடலாகுமா?
Vellayambalam Vazhuthacau 4 Lane: கேரளாவில் வெள்ளயம்பலம் - வழுதக்காடு இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிசாலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Vellayambalam Vazhuthacau 4 Lane: கேரளாவில் வெள்ளயம்பலம் - வழுதக்காடு இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிசாலைக்கான திட்டத்தை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
தரமான சாலைகளின் முக்கியத்துவம்:
நாடு, மாநிலம் அல்லது சிறுநகரம் என எதுவாக இருந்தாலும், அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சி என்பது அங்குள்ள சாலைகளின் தரத்தினை பொருத்தே அமையும். காரணம் சரியான சாலைவசதி இருந்தால் மட்டுமே, தொழில் நிறுவனங்கள் அந்த பகுதியில் முதலீடு செய்ய முன்வரும் . போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் இன்றி, விநியோக சங்கிலி சீராக இயங்கும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் சிரமமின்றி அமைய சாலை வசதி என்பது அத்தியாவசியம். ஆனால், தரமற்ற சாலைகள் மற்றும் முறையான பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், நாட்டிலேயே அதிகம் சாலை விபத்துகளை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில், தான் அண்டை மாநிலமான கேரளா கவனத்தை ஈர்க்கும் விதமாக முன்னோடியான சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெள்ளயம்பலம் - வழுதக்காடு நான்கு வழிசாலை..
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி சாலை திட்டத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளயம்பலம்-ஆல்தாரா-வழுதக்காடு-தைக்காடு-செந்திட்டா திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிட்மினஸ் மெக்காடம் மற்றும் பிட்மினஸ் கான்கிரீட் (பிஎம் மற்றும் பிசி) தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
3 கி.மீ நீளமுள்ள இந்த சாலை ரூ.77.81 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை ஆல்தாராவில் இருந்து நோர்கா சந்திப்பு வரையிலும், மேட்டுக்கடாவிலிருந்து மேம்பாலம் வரையிலும் நான்கு வழிச் சாலையாகவும், நோர்காவில் இருந்து மேட்டுக்கடா வரை இருவழிச் சாலையாகவும் மாற்றப்படுகிறது. இதனுடன், வெள்ளயம்பலத்திலிருந்து ஆல்தராவில் உள்ள 300 மீட்டர் நீளமுள்ள சாலையும் நான்கு வழிச் சாலையாக நிறைவடைந்துள்ளது.
மின்கம்பங்கள் இல்லாத சாலை..
இந்த சாலை வழியாக கடந்து செல்லும் பகுதிகளில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களும் மீட்டெடுக்கப்பட்டு, நுகர்வோருக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பு அந்த சாலையில் இடம்பெற்று இருந்த அனைத்து மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. மேலும் நிலத்தடி குழாய்கள் வழியாக இழுக்கப்பட்ட மின்சார கேபிள்களுக்கு, feeder pillar-களிலிருந்து இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு, தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் கேபிள்களும் பூமிக்கு அடியில் குழாய்கள் வழியாக மாற்றப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக வடிகால்கள் மற்றும் கழிவுநீர் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
விபத்தை தடுக்கும் அம்சம்..
சாலையின் இருபுறமும் டைல்ஸ் பதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற நடைபாதைகள் கட்டப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் கைப்பிடிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது திருவனந்தபுரம் நகரத்தில் சாலைப் பிரிப்பான்களில் (Road Dividers) கண்கூசா எதிர்ப்பு (anti-glare) மீடியன்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே சாலை இதுவாகும். எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளிலிருந்து வரும் ஒளி, எதிர் திசையில் செல்லும் ஓட்டுநர்களின் காணும் திறனை பாதிப்பதை தடுப்பதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் சாலை விபத்துகள் தவிர்க்கப்படும்.
தமிழ்நாட்டில் அமலாகுமா?
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் மொத்தமே 10 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே மாநில அரசு இந்த மேம்பட்ட சாலை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரு கோடிக்கும் அதிகமானோரும், கோவை மற்றும் மதுரையில் 30 லட்சத்திற்கும் அதிகமானோரும் வசிக்கின்றனர். மாநிலத்தின் பல பிரதான நகரங்களில் திருவனந்தபுரத்தை காட்டிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் குறைந்தபட்சம் பிரதான நகரங்களிலாவது, வெள்ளயம்பலம் - வழுதக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று மேம்பட்ட சாலைகளை அமைக்க வேண்டும்.
பலன்கள் என்ன?
மேற்குறிப்பிடப்பட்ட திட்டத்தின்படி, பூமிக்கு அடியில் மின் கம்பிகளை கொண்டு செல்வதன் மூலம், மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும். பராமரிப்பு செலவுகள் கணிசமாக குறையும். அவ்வப்போது கம்பிகள் அறுந்து விழுவதால் அப்பாவி மக்கள் உயிர் பறிபோவதும் தவிர்க்கப்படும். மாற்றுதிறனாளிகளுக்கு என தனி வழித்தடங்கள் அமைப்பது, அவர்களது பயணத்தை மேலும் எளிதாக்கும். anti-glare போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் விபத்துகளை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கக் கூடும். எனவே, சென்னை போன்ற கூட்ட நெரிசல் நிறைந்த தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு, வெள்ளயம்பலம் - வழுதக்காடு சாலை திட்டம் முன்மாதிரியானதாகும். அது தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















