"படகுகளின் பதிவுச் சான்று இரத்து செய்யப்படும்" - எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..! ஏன் தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டிற்கான மீன்பிடி கலன்கள் நேரடி ஆய்வு நாளை நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டிற்கான மீன்பிடி கலன்கள் நேரடி ஆய்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மீனவர்கள் ஆவணங்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுறுத்தி உள்ளார்.
மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம்
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம்-1983-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து மீன்பிடி கலன்களும் ஆண்டுதோறும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டிற்கான ஆய்வுகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.
மயிலாடுதுறையில் சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டிக் கடன் திட்டங்கள்; இதோ முழு விபரம்
மே 14 மற்றும் 28 -ம் தேதிகளில் ஆய்வு
அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கான நேரடி கள ஆய்வு எதிர்வரும் 14.05.2025 அன்று நடைபெறும். நாட்டுப்படகுகளுக்கான ஆய்வு 28.05.2025 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவினருக்கு அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
பதிவுச் சான்று இரத்து
அனைத்து மீன்பிடி படகுகளும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் தெரிவிக்கப்பட்ட வண்ணம் பூசப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் பெறும் படகுகள் நேரடி ஆய்வின்போது உட்படுத்தப்படாவிட்டால், அப்படகுகளுக்கான டீசல் எரியெண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், அவை இயக்கத்தில் இல்லாத படகுகளாகக் கருதப்பட்டு, உரிய விசாரணைக்குப் பின் அவற்றின் பதிவுச் சான்று இரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளுக்கு இடமில்லை
ஆய்வு நாளன்று படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், பின்னர் ஒரு தேதியில் ஆய்வு செய்யக் கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களும் குறிப்பிட்ட தேதிகளில் தங்கள் படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






















