தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் 34 மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுகாதாரத்துறையில் தமிழ்நாடு தனித்துவமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 36 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களையும், சுகாதார நிபுணர்களையும் உருவாக்கும் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை:
தமிழ்நாட்டில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரிகள் தவிர எஞ்சிய 34 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் போதிய அளவிலான பேராசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளில் உள்ள 95 சதவீத பேராசிரியர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பொது மருத்துவம், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் என பொதுமக்களுக்கு அதிகளவு தேவைப்படும் துறைகளுக்கான பேராசிரியர்களே பற்றாக்குறையாக உள்ளது.
விளக்கம் கேட்டு கடிதம்:
இந்த பற்றாக்குறை தொடர்பாக இளங்கலை மருத்துவ படிப்பிற்கான இயக்குனர் சுக்லால் மீனா ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 துறைகளில் 19 துறைகளில் பேராசியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 20 துறைகளில் 8 துறைகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறப்படுகிறது.
மேலும், இந்த மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் கடந்தாண்டு 2024ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் எத்தனை அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட முழு விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையத்தில் பதிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் நிரப்புவோம்:
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவர் சங்குமணி உதவி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும் என்று கூறினார். மேலும், அவர்கள் இன்னும் சில நாட்களில் பணியில் இணைவார்கள் என்றும் இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள் சங்கத்தினர் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடங்கள் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
குவியும் கோரிக்கைகளும், கண்டனங்களும்:
தமிழ்நாட்டில் தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுதோறும் படிக்கும் மாணவர்களுக்கான இடங்கள் 11 ஆயிரத்து 700 ஆகும். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான இளங்கலை இடங்கள் 5 ஆயிரத்து 50 ஆகும். தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான இடங்கள் 4 ஆயிரத்து 453. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான முதுகலை இடங்கள் 2 ஆயிரத்து 294 ஆகும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் 670 ஆகும். அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் 412 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் சுகாதார விவகாரத்தில் எந்த அலட்சிய போக்கும் இருக்கக்கூடாது என்றும், இந்த விவகாரத்தில் விரைவில் தகுதிவாய்ந்த மருத்துவ பேராசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.





















