மயிலாடுதுறையில் சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டிக் கடன் திட்டங்கள்; இதோ முழு விபரம்
கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டிக் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் குறைந்த வட்டிக் கடனுக்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என மாவட்டம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சுய வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டுதல் போன்ற செயல்பாடுகளுக்காக குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன்) மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சுய வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டுதல் போன்ற செயல்பாடுகளுக்காக குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன்) மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
திட்டம் 1-ன் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் பலன் பெற முடியாதவர்கள், திட்டம் 2-ன் கீழ் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடனாக அதிகபட்சம் 20,00,000 ரூபாய் வரை ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக 30,00,000 ரூபாய் வரை கடன் பெறலாம். கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 10,00,000 ரூபாய் வரை விராசாத் கடன் வழங்கப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கு திட்டம் 1-ன் கீழ் நபர் ஒருவருக்கு 1,00,000 ரூபாய் வரை ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் நபர் ஒருவருக்கு 1,50,000 ரூபாய் வரை ஆண்களுக்கு 10% மற்றும் பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.
கல்விக்கடன்
கல்விக் கடனாக, அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு திட்டம் 1-ன் கீழ் அதிகபட்சமாக 20,00,000 ரூபாய் வரை 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவிகளுக்கு 5% வட்டி விகிதத்திலும் 30,00,000 ரூபாய் வரை வழங்கப்படும். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை கைவினை கலைஞர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த விராசாத் கடன் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்கடன் மற்றும் விராசாத் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்போர் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் அல்லது சாதிச்சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை அல்லது வாழ்விட சான்று (ஸ்மார்ட் கார்டு), ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது (அசல்), மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.






















