TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்த வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார் நிச்சயம் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மக்களை சந்தித்த விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கி இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தியுள்ளார். அடுத்ததாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் படி திருச்சி, அரியலூர், திருவாரூர். நாகை. நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை விஜய் முடித்திருந்த நிலையில், கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தவெகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 55 நாட்களுக்கு பிறகு மக்களை சந்திக்க மீண்டும் விஜய் களத்தில் இறங்கியுள்ளார்.
குறி வைத்தால் தவறாது
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய், தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளதாக விமர்சித்தவர், இதற்கு திமுக அரசே காரணம் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறி வைக்கமாட்டேன், எம்ஜிஆர் கட்சியை கூத்தாடி கட்சி என்றார்கள், எம்ஜிஆர் தொண்டர்களை கூத்தாடி கட்சியினர் என்றார்கள். 53 வருடமாக கூத்தாடி கட்சி, நடிகர் கூட்டம் என கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
வீடு, பைக், கார்- தவெக அதிரடி
எனவே குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறி வைக்கமாட்டேன் என எம்ஜிஆர் வசனம், எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட விஜய், ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் நிச்சயம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் லட்சியம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் கட்டாயம் பட்டப்படிப்பு என அறிவித்தார்.
மேலும் தற்குறி என தவெக தொண்டர்களை விமர்சிப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார். தவெகவினர், ஆதரவாளர்கள், GenZ சிறுவர்களை தற்குறிகள் என கூறுகிறார்கள், தவெகவினரை தற்குறிகள் என விமர்சிப்பவர்களுக்கு திமுக எம்எல்ஏவே பதில் அளித்துள்ளார். திமுக எம்எல்ஏவை போல தவெகவினருக்கு எதிரான விமர்சனம் கொண்டவர்கள் மாறுவர்கள் என விஜய் தெரிவித்தார்.





















