பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு - ஒரே மேடையில் மீண்டும் ராமதாஸ், அன்புமணி.. உற்சாகத்தில் பாமகவினர்..!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் வருகின்ற ஆகஸ்ட் 10 -ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று சங்கத்தின் சார்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, இந்த மாநாட்டில் மூன்று லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் எனவும், மேலும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது பாமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில், டாக்டர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 10 -ஆம் தேதி நடைபெற உள்ளது. பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக கெளரவ தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் நடைபெறவுள்ள இந்த வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாட்டில் மூன்று லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பெண்மையை போற்றுவதையும், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதையும் உறுதி செய்யும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

நம்பிக்கை தெரிவித்த பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி
இந்த மாநாட்டிற்கு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருவார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அவர் கலந்துகொள்வதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அவரது வருகை, இந்த மகளிர் மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவும் இந்த மாநாடு ஒரு வலுவான குரலாக ஒலிக்கும். இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
உற்சாகத்தில் பாமக தொண்டர்கள்
இந்த மாநாடு, பெண்களின் நலன் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதுடன், எதிர்வரும் தேர்தல்களுக்கு ஆயத்தப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொள்வார் என்ற பாமக கெளரவ தலைவர் ஜி.கே மணியின் இந்த பேச்சு தொடர்ந்து சமீப காலமாக தந்தை மகனுக்கு இடையே எழுந்து வரும் மனக்கசப்பு நீங்கி, மீண்டும் அவர்கள் இருவரும் இணைவார்கள் என்ற ஜிகே.மணியின் பேச்சு கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






















