மயிலாடுதுறையில் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட வி.சி.க. நிர்வாகி! சூடுபிடிக்கும் போலீஸ் விசாரணை!
மயிலாடுதுறை அருகே விசிகவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை நடுரோட்டில் மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே விசிக கட்சியியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை நடுரோட்டில் வழி மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி இளைஞர் ராஜேஷ்
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் 26 வயதான மாற்றுத்திறனாளி ராஜேஷ். இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்துள்ளதால் செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இதனிடையே நேற்று இரவு மணல்மேட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுள்ளார்.
நடுரோட்டில் வழி மறித்து வெட்டிய மர்ம நபர்கள்
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய போது பெட்ரோல் பங்கிற்கு அருகில் மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ராஜேஷ் வழி மறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணல்மேடு காவல்துறையினர் ராஜேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசிகவினர் போராட்டம்
இந்நிலையில் ராஜேஷின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் மற்றும் விசிக பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டு குற்றவாளிகளை மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நாகப்பட்டினத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
Car Launch July: ஜுலை மாதத்தில் அறிமுகமாக உள்ள கார்கள் - லிஸ்டில் என்னென்ன மாடல்கள் இருக்கு?
காவல்துறையினர் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் பார்வையிட்டார். மேலும் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையா? அல்லது வேறு என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.