ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய பாவம் செய்துள்ளார் - நடிகை கவுதமி
அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கதக்கது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலுக்கு நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி வருகை புரிந்தார். தொடர்ந்து கோயிலில்பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலை நாயகி அம்பாள், மலை மீது அருள் பாலிக்கும் தோனியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமி சன்னதிகளில் நடிகை கவுதமி வழிபாடு மேற்கொண்டார்.
மேலும் கோயில் பிரகாரத்தில் சிவாச்சாரியார் ஆலய வரலாற்றினை கூறியவாறு அதனை கேட்டு கௌதமி பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் நடிகை கவுதமியுடன் செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திருஞானசம்பந்தர் வரலாறு
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3 வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த கவுதமி
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் வழிபாடு மேற்பட்ட நடிகை கவுதமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா, இவ்வளவு ஆண்டுகளாக அரசியலில் சாதித்து படிப்படியாக கட்சியை கட்டி ஒருங்கிணைத்து, நான்கு ஆண்டு காலம் சிறப்பாக முதலமைச்சராக ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது. பெரியவர்களுக்கு மரியாதை தருவது என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயம் இவ்வாறு அவர் பேசியதன் மூலம் அவர் பெரிய பாவம் செய்துவிட்டார் என்றார்.

த.வெ.க இணைய வாய்ப்பு.?
தொடர்ந்து அதிமுக கூட்டணியில் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் அது போக போக தெரியும், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பதிலளித்தார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார், மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என தெரிவித்தார்.






















