Madurai: ”தமிழகம் பெரும் மகிழ்ச்சி அடைவது எப்போது ?” - அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !
தலைமைச் செயலகத்துடன் மதுரையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அரசியல் வசனம் அடங்கிய அஜித்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் தனக்கென தனி ரசிகர் கூட்டம், தனக்கென ஒரு ஃபார்முலா என தனித்து இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஒரு நடிகர் எந்த முயற்சியை எல்லாம் எடுக்கக் கூடாதோ, அதையெல்லாம் அடுத்தடுத்து எடுப்பவர். ரசிகர்கள் தான், ஒரு ஹீரோவுக்கு பலம் என்பார்கள். அந்த ரசிகர் மன்றத்தையே வேண்டாம் என கலைத்தவர் அஜித், 2011 மே 1 ம் தேதி அஜித் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது, ஏப்ரல் 29 ம் தேதி அஜித் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தனது 40 வது பிறந்தநாளில் அஜித் எடுத்த இந்த முடிவு, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. ‛எப்படி இப்படி ஒரு முடிவை அஜித் எடுத்தார்?’ என்று அனைவரும் முனுமுனுத்தனர். ஆனால், அஜித் ஒரு முடிவை எளிதில் எடுப்பவர் அல்ல; எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குபவரும் அல்ல. இன்று வரை ரசிகர் மன்றங்கள் இல்லாத ஒரே மாஸ் ஹீரோ, அவர் மட்டுமே. தனது ரசிகர் மன்றங்களை கலைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அஜித். அரசியல், அமைப்பு என எதிலும் தனது ரசிகர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால், ரசிகர்களை தூரத்தில் நின்று ரசிக்க ஆரம்பித்தார். வழக்கமாக பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை நடிகர்கள் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அதை கூட தவிர்த்தார்.
2011ல் இருந்து அஜித் தனக்குள் ஒரு வட்டத்தை போட்டு அமர்ந்து கொண்டார். 2022ல் திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு வந்த அஜித், அது தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல், சத்தமில்லாமல் தான் வந்தார். ஆனால், துப்பாக்கி தோட்டாக்களை விட வேகமாக பரவிய அந்த தகவல், அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய காரணமானது.
யாரும் ஒருங்கிணைக்காமல் குவிந்த அந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அஜித், கட்டடத்தின் மீது ஏறி, கைகளை அசைத்து, முத்தம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இரவு வரை விடாமல் காத்திருந்த ரசிகர்களை, அவரும் ஏமாற்றாமல், வெளியே வந்து உற்சாகப்படுத்தி, பலத்த பாதுகாப்புக்கு இடையே அங்கிருந்து புறப்பட்டார். இது 11 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ரசிகர்கள் சந்திப்பு. அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும் என்பதும் தெரியாது. அதை அறிந்தவர் அஜித் மட்டுமே. வெளியே செல்லும் போது, அங்கிங்குமாய் ஒருவர் இருவரை சந்திப்பது என்பது வேறு; ஒருவருக்காக ஒரு கூட்டமே கூடி, அவர்களை சந்திப்பது என்பது வேறு. மங்காத்தா படப்பிடிப்பிற்கு பின், திருச்சியில் நடந்தது அது தான். இந்நிலையில் பயணங்கள் முடிவதில்லை. 30 வருட திரையுலகம் பெருமிதம் இப்போது, தமிழகம் பெரும் மகிழ்ச்சி அடைவது எப்போது? தலைமைச் செயலகத்துடன் மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பயணங்கள் முடிவதில்லை
— Arunchinna (@iamarunchinna) August 2, 2022
30 வருட திரையுலகம் பெருமிதம் இப்போது,
தமிழகம் பெரும் மகிழ்ச்சி அடைவது எப்போது ?
தலைமைச் செயலகத்துடன் மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்.#madurai | @AjithFC_Mdu @TCAFMDU | @ThalaSTRoff @MTW_offl | @APAG_Off @jp_muthumadurai @Ajithbala1222 @PTUshaOfficial pic.twitter.com/rKXk7YwZYH