போதை வஸ்துக்களின் வரத்தும், புழக்கமும் தற்போது திமுக ஆட்சியில் அதிகரித்து உள்ளது - தினகரன்
மீனவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் பாதிப்பிற்கு முக்கிய காரணம் திமுகதான் - டிடிவி தினகரன்

போடிநாயக்கனூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேனி தெற்கு மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகவை கடுமையாக சாடினார். டிடிவி தினகரன் பேசுகையில், கச்சத்தீவை மீட்போம் என்று சட்டசபையில் இன்று தீர்மான அறிக்கை வெளியிட்ட நிலையில், அது பற்றி கேட்ட பொழுது கச்சத்தீவை அடமானம் வைத்தது அப்போது தமிழக முதல்வராய் இருந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான். இன்று அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கும் பொழுது அது பற்றி பேசுவது வேதனைக்குரியது என்றும் இதனால் மீனவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் பாதிப்பிற்கு முக்கிய காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தற்போது நடைபெறும் என்கவுன்டர்கள் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் வரத்தும், புழக்கமும் தற்போது திமுக ஆட்சியில் அதிகரித்து உள்ளது என்றும், இதற்கு அடிமையான இளைஞர்கள் பெண் குழந்தைகள் ஏன் வயதான முதியோர்களை கூட விடுவதில்லை என்றும் போதை காரணமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் மக்கள் மிகப்பெரும் அதிருப்திக்குள்ளாகி வருவதாகவும் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் இதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பற்றியும் அண்ணாமலையின் தலைமை குறித்தும் கேள்வி எழுப்பிய பொழுது, தற்போது வரும் தகவலுக்கு எல்லாம் அனுமானங்களின் அடிப்படையில் வருவதாகவும் குறித்து எந்த தெளிவான கருத்துக்களும் கூற முடியாது என்றும் பதில் அளித்தார். தேனி முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே எழுந்து வரும் அரசியல் பனிப் போர் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக நீதிமன்றமே உத்தரவு வழங்கிய நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செயல்படுத்த முடியாது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து அமமுக தொண்டர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கூறிய நிலையில் அந்த குழந்தைக்கு இளன் என்று பெயரிட்டார். அதனை தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.





















