திருச்சி-காரைக்கால் டெமு ரயில் சேவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு! பயணிகளுக்கு என்னென்ன மாற்றங்கள்?
திருச்சி டூ ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வரை இயக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும்.

திருச்சி - காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலுக்கு நாள்தோறும் டெமு (DEMU) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவை மூலம் காவிரி டெல்டா மக்களும் , திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயனடைகின்றனர்.

தற்போது திருவாரூர்-கீழ்வேளூர் இடையே ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சி- காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 16 இன்றும் ஜூன் 18,19,20,21,22 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்படும் டெமு ரயில், திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவாரூர்- காரைக்கால் இடையே டெமு ரயில் சேவை ரத்து செய்யப்படும். அதேபோல டெமு ரயில் காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக இன்று ஜூன் 16, 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்படும். காரைக்கால்- தஞ்சாவூர் இடையேயான பயணிகள் ரயில் (56817) இன்று ஜூன் 16, 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக தஞ்சாவூரை வந்தடையும்.
அதேபோல் சத்திரக்குடியில் ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணியால் ராமேஸ்வரத்திற்குப் பகல் நேரத்தில் இயக்கப்படும் தினசரி ரயில் அடுத்த மாதம் வரை நிறுத்தப்படும் என மதுரை கோட்டம் சார்பில் அறிவிப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பழைய ரயில் பாலம் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செயல் இழந்து, புதிய ரயில் பாலம் ரூ.550 கோடி செலவில் அமைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி திறக்கப்பட்டு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு புதிய ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், சத்திரக்குடியில் நடைபெறும் தண்டவாளப் பராமரிப்புப் பணி காரணமாக ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் மூன்று தினசரி ரயில்கள் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்குப் பகல் 11:50 மணிக்கு இயக்கப்படும் தினசரி ரயில் ஜூலை 4-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ஸ்பெஷல் ரயில் நண்பகல் 2:40 மணிக்குச் செல்லும். திருச்சி டூ ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வரை இயக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும். ஜூலை 4-ம் தேதி இந்த விதிமுறைகள் இருக்கும் எனத் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















