TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதேசமயம் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால் அவர்களும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையனின் ஏரியா என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலும்.. தவெக அரசியலும்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் 3 மாத காலமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. இதனால் 2026 தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது. யாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?, யார் ஆட்சிக்கு வரப்போகிறார்? என்ற கேள்விகள் இப்போதே எழத் தொடங்கி விட்டது.
தமிழக வெற்றிக் கழகமும் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பை தொடங்கியது. ஆனால் கரூரில் நடந்த நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பிறகு கிட்டதட்ட 72 நாட்கள் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தாமல் இருந்தார். ஆனால் டிசம்பர் முதல் வாரம் புதுச்சேரியில் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
செங்கோட்டையனின் கோட்டையில் விஜய்
இந்த நிலையில் விஜய் டிசம்பர் 18ம் தேதியான இன்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் சொந்த மாவட்டமான ஈரோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். தமிழக அரசியலின் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் இதற்கான ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த முறை அதெல்லாம் இல்லை. விஜய்யை காண வருபவர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் வழங்கப்படும் எனவும், போதுமான கழிவறை வசதி, மருத்துவம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் கூடுவார்கள் என செங்கோட்டையன் கணித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியானது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சுங்கச்சாவடி சரளையில் அமைந்திருக்கும் விஜயபுரி அம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதேசமயம் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால் அவர்களும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் விஜய் அங்கிருந்து கார் மூலமாக பரப்புரை நடக்கும் இடத்துக்கு காலை 11 மணிக்கு செல்லவுள்ளார். மேடை இல்லாமல் மக்கள் முன்பு நின்று பேச பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை விஜய் குறைந்தது 30 நிமிடமாவது பேச வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் தொடர்பான மிக முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





















