TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், காலை 8 மணி முதலே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரலாம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியது என்ன.?

ஈரோட்டில் நாளை தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து, கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, உணவு ஏற்பாடு, கியூ ஆர் கோட் பாஸ் உள்ளிட்டவை குறித்து அவர் கூறியது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
கரூர் சம்பவத்திற்குப் பின் தமிழ்நாட்டில் விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை ஏற்கனவே தொடங்கி விட்டனர். அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் முதல் பிரமாண்ட பொதுக் கூட்டமாக ஈரோடு மாவட்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடு
இந்த கூட்டத்தில், 10 ஆயிரம் தொண்டர்கள் மற்றும் 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில், பொதுக்கூட்ட மைதானம் 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 60 ஏக்கர் இடத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கும், 20 ஏக்கர் இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை பகல் 11 மணி முதல் 1 மணிவரை பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில், தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முன்னதாக, சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு விஜய் வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் பேச உள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாகவே பொதுக்கூட்ட மைதானத்தை, தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
ஏற்பாடுகள் குறித்து செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில், பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், உணவு வழங்கும் திட்டம் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
காவல்துறை நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், பொதுக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு மக்களும், தொண்டர்களும் வரலாம் என்றும், கியூ ஆர் கோடு, பாஸ் போன்றவை தேவையில்லை என்றும் கூறினார்.





















