SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Nuclear Energy Bill : அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் சாந்தி மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

SHANTI Nuclear Energy Bill : அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் சாந்தி மசோதா, விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவையில் சாந்தி மசோதா:
அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக, இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India - SHANTI) மசோதாவை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவில் உள்ள சில பிரிவுகள் கவலை அளிப்பதாகவும், முழுமையான ஆய்வுக்காக நாடாளுமன்றக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின.
காங்கிரஸ் விமர்சனம்:
மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, “அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பிலிருந்து அணுசக்தி உபகரணங்களை வழங்கும் சப்ளையர்களை நீக்கும் பிரிவைத் தவிர்ப்பது இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார். 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டு அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்வதாக குறிப்பிட்டு மசோதாவில் உள்ள விதிகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். மிகவும் முக்கியமான மற்றும் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டிய அணுசக்தி துறையை தனியார்வசம் ஒப்படைப்பது பாதுகாப்பானது அல்ல என்றும் பலர் எச்சரித்தனர். இது அரசாங்கமே குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என்றும் அறிவுறுத்தினர்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகள்:
- அணுசக்தி நிறுவனங்களுக்கான அதிகபட்ச பொறுப்புத் தொகைகள் ரூ.100 கோடியிலிருந்து அதிகபட்சம் ரூ.3,000 கோடி வரை என்பது சாத்தியமான பேரழிவு சேதத்திற்கு மிகவும் குறைவு
- அணு சக்தி துறையில் பல செயல்பாடுகளுக்கு ஒற்றை கூட்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்க எந்தவொரு நிறுவனத்தையும் அல்லது நபரையும் அனுமதிப்பது பாதுகாப்பில் சமரம் செய்துகொள்வதற்கு சமம்
- விபத்து ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீட்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு மூன்று ஆண்டு கால அவகாசத்தை இந்த மசோதா வழங்குகிறது, சொத்து சேதத்திற்கு 10 ஆண்டுகள் மற்றும் தனிப்பட்ட காயத்திற்கு 20 ஆண்டுகள் என அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கதிர்வீச்சு தொடர்பான தாக்கம் 20-30 ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடும்
- சில அணுசக்தி நிலையங்கள் "முக்கியமற்றவை" என்று கருதப்பட்டால், உரிமம் அல்லது பொறுப்புத் தேவைகளிலிருந்து மத்திய அரசை விலக்கு அளிக்க அனுமதிக்கிறது. இது சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கக் கூடும்
மத்திய அரசு விளக்கம்:
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டங்களின் கடுமையான விதிகள் தொழில்துறையினரிடையே பயத்தைஏற்படுத்தியது. இதனால் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், அணுசக்தித் துறையை தனியார் பங்கேற்புக்குத் திறப்பதற்கும் அரசாங்கம் ஒரு புதிய விரிவான மசோதாவைக் கொண்டுவரத் தூண்டியது. அரசாங்கம் ஆபரேட்டருடன் மட்டுமே கையாளும், சப்ளையரை கையாள்வது ஆபரேட்டரின் பொறுப்பாகும். பல அடுக்கு வழிமுறை மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
”100 ஜிகாவாட் அணுசக்தி திறன்”
புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நாம் ஒரு உலகளாவிய போட்டியாளராக இருக்க வேண்டுமென்றால், உலகளாவிய அளவுகோல்களையும் உலகளாவிய உத்திகளையும் நாம் பின்பற்ற வேண்டும். உலகம் சுத்தமான எரிசக்தியை நோக்கி நகர்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை நாமும் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எரிசக்தி கலவையில் அணுசக்தியின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கவும் இந்த மசோதா அவசியம்” என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
மக்களவையில் நிறைவேற்றம்:
விவாதத்திற்குப் பிறகு மசோதா நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படாமல் , குரல் வாக்கெடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, அவையில் இருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விரைவிலேயே இந்த மசோதா மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அங்கும் நிறைவேற்றப்பட்டால், விரைவில் சட்டமாக்கப்பட்டு அடுத்த நிதியாண்டு முதலே இது நடைமுறைக்கும் கொண்டு வரப்படலாம்.





















