70 அடியை தொடவுள்ள வைகை அணை நீர்மட்டம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் நீர்வளத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிலும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 580 கனஅடியாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்த அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 2518 கனஅடிக்கும் அதிகரித்துள்ளது.
இதனால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. நள்ளிரவு 3.30 மணியளவில் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள பகுதிக்கு முதலாவது எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல தேனி மாவட்டம் மூலவைகை ஆறு, கொட்டக்கூடி ஆறு, முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளில் இருந்து வந்த அதிகப்படியான நீர்வரத்து காரணமாக வைகை அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 4ஆயிரத்து 944கன அடியாக குறைந்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 69.57 அடியை எட்டியது.
தற்போது வினாடிக்கு 4 ஆயிரத்து 944 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களில் ஒப்பிடுகையில் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5 ஆயிரத்து 720 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 944 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாளில் 3 அடி உயர்ந்து தற்போது 69.57 அடியை எட்டியதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் நீர்வளத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.