South TN Rains: வெள்ளப் பாதிப்பில் இருந்து மீளும் திருநெல்வேலி! நெல்லையில் மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து!
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலியில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் இருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்த நெல்லை:
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து பெரிய அளவில் செயல்படவில்லை. ஆங்காங்கே தண்ணீர் இல்லாத பகுதிகள் வழியாக வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று மழை ஓய்ந்த நிலையில் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரயில் சேவை பாதிப்பு
இதனிடையே தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்ற விரைவு ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக கோவில்பட்டி ரயில் நிலையத்தை தாண்டி எந்த ரயிலும் செல்ல முடியவில்லை. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதோடு, மழை வெள்ளத்தால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
#Tirunelveli Junction railway station. Train operations start #NellaiRains pic.twitter.com/qOASa6Ze9s
— Thinakaran Rajamani (@thinak_) December 20, 2023
அனைத்து ரயில் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போல காணப்பட்டது. அதேசமயம் நெல்லை அருகே கங்கைகொண்டான், திருச்செந்தூர் அருகே தாதன் குளம் ஆகிய ரயில் நிலையம் அருகே தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ரயில்களை சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வந்தது.
செயல்பட தொடங்கிய ரயில் நிலையங்கள்
இந்நிலையில் மழை ஓய்ந்து தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் - பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம்போல முக்கியமான ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.