தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது
இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்த உதித்சூர்யா என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கினர்.
மேலும் கேரளா,ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக ஜார்க்கண்ட் சேர்ந்த கிருஷ்ணா முராரே (37) என்பவரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த மேலும் இருவருக்கு இந்த ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சாகித் சின்ஹா (39) மற்றும் ரகுவன்ஸ் மணி (39) ஆகிய இருவரையும் தேனி சி.பி.சி.ஐ.டி.போலீசார் நேற்று காலை பெங்களூரில் கைது செய்து நேற்று இரவு தேனி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வந்தனர்.
இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி ஆகிய இருவரும் பீகாரில் எஜுகேஷன் கன்சல்டிங் ஏஜென்சி(Education Consulting Agency) நடத்தி வந்ததும், அதன் மூலமாக நீட் தேர்வில் மாணவ, மாணவிகளை ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தியதும், அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லலிதா ராணி முன்னிலையில் ஆஜர் படுத்திய 15 நாட்கள் சிறைகாவலி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் சிறைக்கு கொண்டு சென்றனர். மேலும் வருகின்ற 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த நீதிபதி உத்தரவு விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் விசாரணைக் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்