பெரியகுளம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் - நோயாளிகள் கடும் அவதி
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் QPMS என்ற நிறுவனத்தின் மூலம் மருத்துவமனை துப்புரவு பணிகள், சமையல் உதவியாளர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெண்கள் உட்பட 80 நபர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் 609 ரூபாய் வழங்க உத்தரவிட்டும் ஒப்பந்த எடுத்துள்ள QPMS நிறுவனம் 285 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும், தமிழ்நாடு தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் எனவும்,
கொரோனா பொது முடக்கத்தின்போது அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் தமிழக அரசு ஊக்க தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டும் இதுவரையில் வழங்காத, கொரோனா காலத்தில் பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்சம் ரூபாய் இதுவரையில் வழங்கப்படவில்லை உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மர்மங்கள் நிறைந்த மதிகெட்டான் சோலை! திகில் காட்டின் உள்ளே நடப்பது என்ன?
மேலும் தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், காவல்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் தொடர் இரவிலும் தொடர்ந்த காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒப்பந்தம் எடுத்துள்ள QPMS நிறுவனம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்வோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணி உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறாத நிலையில் தற்காலிக பணியாளர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.