Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தென்மாவட்டமான விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி,சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் நடைபெறும். இதுதொடர்பாக எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அதிக உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. 3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு தயாரிக்க வெடி மருத்து கலவை உருவாக்கியபோது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்., “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் . பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்து காட்டாச்சி நடத்தும் இந்த விடியோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் பல தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாகும் விடிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.